22.ஒப்புரவறிதல.
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
22. ஒப்புரவறிதல்
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
மழைக்கென்ன கைம்மா றளிப்பார்? மழைபோல்
உதவுவோரும் நாடமாட்டார் இங்கு.
குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
வாழ்க்கையில் சேர்க்கின்ற செல்வங்கள் எல்லாமே
ஏழைக்குத் தந்துதவத் தான்.
குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
எந்த உலகிலும் உற்றாரைக் காப்பாற்றும்
ஒப்புரவுப் பண்போ அரிது.
குறள் 214:
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
மற்றவர்க்கு அன்பாய் உதவுபவன் வாழ்பவன் !
செத்தார்போல் மற்றவர் சொல்.
குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
ஊருக் குதவுகின்ற ஊருணிபோல்
பேரறி
வாளனிடம் உள்ளசெல்வம் இங்கு.
குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
கருணைமனங் கொண்டவரின் செல்வம்
பழுத்த
மரமொன்று ஊர்நடுவே போல்.
குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
பெருந்தன்மை யாளனின் செல்வம் மருந்து
மரம்போல் பயன்படும் சொல்.
குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.
உதவ முடியாத காலத்தும் உதவத்
தயங்கமாட்டார் ஏழைக்குத் தான்.
குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.
உதவ முடியவில்லை என்றே வருந்தும்
நிலையே
மனமுடையோன் ஏழ்மை நிலை.
குறள் 220:
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
ஒப்புரவால் கேடுவரும் என்றால் தனைவிற்றும்
அக்கேட்டை வாங்குதல் நன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home