Thursday, December 10, 2020

20. பயனிலசொல்லாமை

 குறள்களுக்குக் குறள்வடிவத்தில் கருத்து

20 பயனிலசொல்லாமை!

குறள் 191:

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

எல்லோரும் கேட்டு முகஞ்சுழிக்கப்  பேசுவோரை

எல்லோரும் தூற்றுவார் சொல்.

குறள் 192:

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கட் செய்தலிற் றீது.

பலர்முன் பயனற்ற சொல்பேசல், நட்பைக்

கலைக்கின்ற தீமையினும் கீழ்.

குறள் 193:

நயனில னென்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.

பயனற்ற சொல்லை விரித்துரைப்போன் நீதி

தவறுவோன் என்றுணர்த்தும் சொல்.

குறள் 194:

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.

பலரிடம் பண்பும்  பயனுமற்ற சொல்லை

விளம்புதல்  நன்மைக்குத் தீது.

குறள் 195:

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்

பார்போற்றும் சான்றோர் பயன்ற்ற சொல்சொன்னால்

வேரோடும் நன்மதிப்போ பாழ்.

குறள் 196:

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி யெனல்.

பயனற்ற  சொற்களைப் பேசுவோனை மக்கள்

பதரென்பார், மானிடராய் அன்று.

குறள் 197:

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

அறமற்ற சொற்களைச் சொன்னாலும் சான்றோர் 

பயனற்ற சொல்தவிர்த்தல் நன்று.

குறள் 198:

அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்

பெரும்பய னில்லாத சொல்.

அரிய பயன்களை ஆயும் அறிஞர்

பயனற்ற சொல்சொல்லார் பார்.

குறள் 199:

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.

தெளிந்த அறிவுடைய மாசற்றோர் சொல்லார்

பயனற்ற சொற்களைத் தான். 

குறள் 200:

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

நல்ல பயனுள்ள சொற்களைச் சொல்லவேண்டும்!

இல்லையேல் சொல்லாதே இங்கு.


மதுரை பாபாராஜ்



































0 Comments:

Post a Comment

<< Home