24 புகழ்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
24 புகழ்
குறள் 231:
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.
ஏழைக் குதவவேண்டும்! அந்தப் புகழொன்றே
வாழ்வின் பயனாகும் இங்கு.
குறள் 232:
உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.
ஒருவரைப் போற்றுவதே ஏழைக் குதவும்
புகழ்பெற்ற காரணத்தால் தான்.
குறள் 233:
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்.
மண்ணுலகில் என்றும் நிலைத்திருக்கும்
பண்பாய்த்
திகழ்தல் புகழ்மட்டுந் தான்.
குறள் 234:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.
வருமுலகு கூட அறிஞரை விட்டுப்
பொதுநலத் தொண்டர் புகழையே போற்றும்!
பொதுநலத் தொண்டே புகழ்.
குறள் 235:
நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
நற்புகழைத் தொண்டுகளால் ஈட்டி அறிஞர்கள்
செத்தபின்பும் பேசப் படும்.
குறள் 236:
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
தேர்ந்தெடுத்தால் அத்துறை வல்லுநராய் ஆகவேண்டும்!
ஆர்வமில்லை,நாடாமை நன்று.
குறள் 237:
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.
புகழ்வர வில்லையெனில் நோகவேண்டும் தன்னை!
இகழ்வோரைச் சாடுவதேன்? சொல்.
குறள் 238:
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
தனக்குப் பிறகுமிங்கே நிற்கும் புகழை
மனிதன் பெறவில்லை என்றாலோ வாழ்வைப்
பழியென்று சொல்லும் உலகு.
குறள் 239:
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
புகழற்ற யாக்கை சுமந்த நிலமோ
விளைச்சலற்ற வெற்றுத் தரிசு.
240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
பழியற்ற வாழ்க்கையே வாழ்க்கை, புகழின்
ஒளியற்ற வாழ்க்கை இருள்.
0 Comments:
Post a Comment
<< Home