Thursday, December 24, 2020

37 அவா அறுத்தல்

 குறள்களுக்குக்  குறள்வடிவில் கருத்து


37 அவா அறுத்தல்


குறள் 361:

அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்

தவாஅப் பிறப்பீனும் வித்து.

புவிவாழ்வில் துன்பம் வளர்வதற் கெல்லாம்

தவிக்கவைக்கும் ஆசையே வித்து.

குறள் 362:

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

துன்பம், பிறவிவேண்டாம் என்றேதான் சொல்லவைக்கும்!

துன்பமோ ஆசையால் தான்.

குறள் 363:

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃதொப்ப தில்.

ஆசைப் படாத நிலைக்கொத்த செல்வமில்லை!

வேறுசெல்வம் இல்லை நிகர்.

குறள் 364:

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்

தூய்மையோ பேராசை யற்ற நிலையாகும்!

வாய்மையே அத்தூய்மை தரும்.

குறள் 365:

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்

அற்றாக அற்ற திலர்

பற்றற்றவர் ஆசையே அற்றவர்! மற்றவர்

பற்றற்றோர் ஆகமாட் டார்.

குறள் 366:

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.

வஞ்சித்துப் பார்ப்பதே ஆசைதான்! அவ்வாசைக்(கு)

அஞ்சிவாழ்தல் வாழ்வின் அறம்.

குறள் 367:

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.

அவாவை விலக்குகின்ற மாந்தருக்கு

இந்தப்

புவியில் அறவாழ்க்கை உண்டு.

குறள் 368:

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

அவாவை ஒழித்தவர்க்குத் துன்பமில்லை! ஆசை

உலாவந்தால் என்றும் துயர்.

குறள் 369:

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்

துன்பத்துள் துன்பங் கெடின்.

துன்பம் எனப்படும் ஆசையே இல்லையெனில் 

இன்ப மயமாகும் வாழ்வு.

குறள் 370:

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

வாழ்க்கையில் ஆசையை நீக்கிவிட்டால்  

நீங்காத

பேரின்பம் காண்ப தியல்பு.



0 Comments:

Post a Comment

<< Home