Monday, December 21, 2020

32 இன்னா செய்யாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

32 இன்னா செய்யாமை

குறள் 311:

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

சிறப்பான செல்வங்கள் வந்தாலும் 

பிறரை

அகம்நோகத் துன்பங்கள் செய்யாமல் வாழ்வோர்

அகத்திலே மாசற்றோர் தான்.

குறள் 312:

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள். கடுங்கோபம் கொண்டே வதைப்போரைக் கூட

பொறுத்திருப்பார் மாசற்றோர் இங்கு.

குறள் 313:

செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமந் தரும்.

சும்மா இருப்போரைத் துன்புறுத்து வோருக்கோ

துன்பத்தைத்  தந்தால்  துயர்.

குறள் 314:

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

துன்பத்தைச் செய்தாலும் செய்தவர் நாணுமாறு

நன்மையைச் செய்தலே நன்று.

குறள் 315:

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போற் போற்றாக் கடை.

துடிக்கவேண்டும் மற்றவர் துன்பத்தை

எண்ணி!

துடிப்பற்றோர் மாந்தரல்ல சொல்.

குறள் 316:

இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கட் செயல்.

துன்பமென்றுத் தானெண்ணும் துன்பத்தை மற்றவர்க்கோ

என்றும் தவிர்த்தலே பண்பு.

குறள் 317:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

எவரெனினும் உள்ளத்தால் எள்ளளவும்

தீமை

தவறியும் செய்யாமை நன்று.

குறள் 318:

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க் கின்னா செயல்.

துன்பம் நமக்குவந்தால்  வாடுகிறோம்! மற்றவர்க்குத்

துன்பத்தை நாம்செய்வ  தேன்?

குறள் 319:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்.

பிறருக் கொருமுறை துன்பத்தைச் செய்தால்

மறுமுறை உண்டு நமக்கு.

குறள் 320:

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

தீயவை செய்தவர்க்கே தீயவை வந்துசேரும்!

தீயவை நாடாதார் மற்றவர்க்குச் செய்யாமல்

தூயவாழ்க்கை வாழ்தல் சிறப்பு.


மதுரை பாபாராஜ்








































0 Comments:

Post a Comment

<< Home