Sunday, December 20, 2020

30 வாய்மை

 


குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!

30 வாய்மை

குறள் 291:

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்

தீமை யிலாத சொலல்.

யாருக்கும் தீமை பயக்காமல் சொல்வதே

வாய்மை எனப்படும்! கூறு.

குறள் 292:

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.

பொய்சொன்னால் குற்றமற்ற நன்மை கிடைக்குமென்றால் 

பொய்கூட வாய்மைதான் சொல்.

குறள் 293:

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

நெஞ்சறிய பொய்பேசி வாழவேண்டாம்! பேசினால்

நெஞ்சே பொசுக்கும் உணர்.

குறள் 294:

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

உள்ளம் அறிந்திடப்  பொய்சொல்லாப் பண்பாளர்

இவ்வுலைம் மெச்சவாழ் வார்.

குறள் 295:

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.

மனமறிய வாய்மை கடைப்பிடிப்போர் தானம்

தவஞ்செய் தலினும் மேல்.

குறள் 296:

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமுந் தரும்.

பொய்சொல்லாப் பண்பு புகழ்மிக்க வாழ்வாம்!

அவ்வாழ்வே நல்லறம் இங்கு.

குறள் 297:

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

பொய்களைப் பேசாமல் வாழ்வோன்,

அறங்களைச் 

செய்யா விடினும் நன்று.

குறள் 298:

புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

புறத்தூய்மை தண்ணீரால்! உள்ளமோ

வாய்மை

கடைப்பிடித்தால் தூய்மை பெறும்.

குறள் 299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

அல்லிருளைப் போக்கும் விளக்கு விளக்கல்ல!

பொய்யாமை சான்றோர் விளக்கு.

குறள் 300:

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

நாமறிந்த பண்புகளில் வாய்மைபோல்

வாழ்க்கையில்

பாமணக்கும் பண்பில்லை சாற்று.


மதுரை பாபாராஜ்






























0 Comments:

Post a Comment

<< Home