Wednesday, December 16, 2020

27 தவம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

27 தவம்

குறள் 261:

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு.

மற்றவர்க்குத் துன்பம் கொடுக்காமல், புண்படுத்தும்

மற்றவரைத் தாங்கல் தவம்.

குறள் 262:

தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை

அஃதிலார் மேற்கொள் வது.

புலனடக்கம் கொண்டோர் தவக்கோலம் நன்று!

இலாதோர் தவக்கோலம் வீண்.

குறள் 263:

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்

மற்றை யவர்கள் தவம்.

துறவிக் குதவவேண்டும்  என்றே தவத்தை

மறந்தனரோ மற்றவர்கள் இங்கு,?

குறள் 264:

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.

வன்பகையை மாற்றவும் நட்பை வளர்க்கவும்

என்றும் உதவும் தவம்.

குறள் 265:

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

வேண்டுவ தெல்லாம் தவத்தால் கிடைப்பதால்

ஏந்துவோம் இல்லறத்தில் தான்.

குறள் 266:

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

தவம்செய்வோர்  தன்கடமை செய்வோர்! பிறரோ

வலையாசைக் குள்துடிக்கும் மீன்.

குறள் 267:

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

சுடச்சுட பொன்னொளிரும்! துன்பத்தைத் தாங்கி

நடக்கும் தவமளிக்கும் மாண்பு.

குறள் 268:

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்.

தன்னுயிர்,தானென்னும் ஆணவம் இல்லாத

பொன்மனத்தைப் போற்றும் உலகு.

குறள் 269:

கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

வாட்டுகின்ற  துன்பத்தைத் தாங்கும் உறுதிகொண்டோர்

கூற்றையும் வெல்வார் நிமிர்ந்து.

குறள் 270:

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.

தவத்தில் சிலரும் தவிர்ப்பில் பலரும்

அவனியில் உள்ளதன் காரணம் அடக்கம்

தவிர்ப்போர் பலரானார் இங்கு.









































0 Comments:

Post a Comment

<< Home