Sunday, December 20, 2020

31 வெகுளாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து


31 வெகுளாமை

குறள் 301:

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்

காக்கினென் காவாக்கா லென்.

செல்லு மிடத்தில் சினம்காத்தல் நல்லது!

செல்லா இடத்திலே காத்தாலும் காக்காமல்

துள்ளினாலும் ஒன்றே உணர்.

குறள் 302:

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்லதனின் தீய பிற.

நம்கோபம் செல்லா இடத்திலே தீது! செல்லுமிடந்

தன்னிலே காட்டினாலும் தீது.

குறள் 303:

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய

பிறத்தல் அதனான் வரும்.

மறக்கவேண்டும் கோபத்தை யாரெனினும்! இல்லை

அதனால் பெருகிவரும் கேடு.

குறள் 304:

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்

பகையும் உளவோ பிற.

முகமலர்ச்சி  மற்றும் அகமகிழ்ச்சி இங்கே

மறையும் சினங்கொள் பவர்க்கு.

குறள் 305:

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

தன்னையே காக்க சினங்கொள்ளக் கூடாது!

கொண்டால் தனக்கே அழிவு.

குறள் 306:

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்.

சினங்கொண்ட மாந்தரைக் கோபம் அழிக்கும்!

இனச்சுற்றம் சேர்ந்தழியும் சாற்று.

குறள் 307:

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

நிலத்தை அறைந்தவனின் கைவலிக்கும்! அந்த

நிலையே சினங்கொண் டவர்க்கு.

குறள் 308:

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.

அனல்போல தீமைகள் செய்தோன் மனம்வருந்தி வந்தால் கோபப் படாத

குணங்கொள்ளும் பண்பே அழகு.

குறள் 309:

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி யெனின்.

உள்ளத்தில் கோபமே கொள்ளாதோன் 

எண்ணிய

தெல்லாம் பெறுவான் உணர்.

குறள் 310:

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை.

இறந்தார்க்கே ஒப்பாம் சினமுடையோர்!

துறவிச்

சிறப்புடையோர் கோபமற்றோர் தான்.


மதுரை பாபாராஜ்


























 




0 Comments:

Post a Comment

<< Home