Tuesday, December 22, 2020

35 துறவு

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

35 துறவு

குறள் 341:

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் அலன்.

ஆசையை எப்பொருளின் மீதுநாம் நீக்கினோமோ

கேடில்லை அப்பொருளால் தான்.

குறள் 342:

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டியற் பால பல.

தூண்டிலிடும் பற்றைத் துறந்துவிட்டால் நன்மைகள்

ஊன்றி வளரும் உணர்.

குறள் 343:

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

அடக்கவேண்டும் அய்ம்புலனை! ஆசை வெறியை!

துறவின் ஒழுக்கம் இது.

குறள் 344:

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து.

துறவெனில் பற்றற்று வாழ்தலே! ஆசை

தொடர்ந்தால் சலனமே வாழ்வு.

குறள் 345:

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க் குடம்பும் மிகை.

பற்றைத் துறந்தோர்க்(கு) உடம்பே மிகையாகும்!

மற்ற தொடர்பேனோ  சொல்?

குறள் 346:

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த உலகம் புகும்.

யானென்றும் மற்றும் எனதென்றும் எண்ணாதோன்

ஞானமுடன் வாழ்வான் உயர்ந்து.

குறள் 347:

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர்க்கு.

பற்றுகளைப் பற்றி விடாதோரைத் துன்பங்கள்

பற்றித் தொடரும் தொடர்ந்து.

குறள் 348:

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

அனைத்தும்  துறந்தோர் துறவி!

சலனச்

சுனையே அறியாமை ஊற்று.

குறள் 349:

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.

பற்றைத் துறந்துவிடு இன்பதுன்பம் தீண்டாது!

மற்றபடி என்றால் பிறவியை ஆட்டுவிக்கும்!

பற்றே பிறவித் துயர்.

குறள் 350:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

பற்றுகளை விட்டவரைப் பற்றும் முடிவெடுத்தால்

பற்றுகளை நீக்கலாம் நாம்.


















.




















0 Comments:

Post a Comment

<< Home