Tuesday, January 26, 2021

107 இரவச்சம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

107 இரவச்சம்

குறள் 1061:

கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்.


இரக்கமனம் உள்ளோரை நாடித்தான் சென்றே

இரவாமை கோடிநன்மை யாம்.

குறள் 1062:

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.


இரந்துதான் வாழவேண்டும் என்றால் படைத்தோன்

திரிந்தேதான் கெட்டழிதல் மேல்.

குறள் 1063:

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்.


வறுமையை நாமோ இரந்துதீர்ப்போம் என்ற

கொடுமையைப் போல்வேறுண் டோ?

குறள் 1064:

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு.


வாழவழி இல்லாத போதும் இரவாமல்

வாழும் பெருமை பெரிது.

குறள் 1065:

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த

துண்ணலின் ஊங்கினிய தில்.


கஞ்சி எனினும் உழைத்த உழைப்பினால்

உண்பதே சாலச் சிறப்பு. 

குறள் 1066:

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்

கிரவின் இளிவந்த தில்.


பசுகுடிக்கத் தண்ணீர் இரந்தாலும் அஃதோ

இழிவாகும் நாவிற் குணர்.

குறள் 1067:

இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்

கரப்பார் இரவன்மின் என்று.


இல்லையென்று சொல்வா ரிடத்திலே கேட்கவேண்டாம்

என்றேதான் கெஞ்சுகிறேன்  இங்கு.

குறள் 1068:

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.


தரமறுக்கும் கல்நெஞ்சம் மீதோ இரத்தல்

கலம்மோதி சேதமாகும் சொல்.

குறள் 1069:

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.


இரத்தலை எண்ணினால் உள்ளம் உருகும்!

மறுத்தால் உடைந்திடும் நெஞ்சு.

குறள் 1070:


கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.


கேட்டும் தரவில்லை என்றால் உயிர்த்துடிக்கும்!

தூற்றும் உயிரெங்கு போம்?


மதுரை பாபாராஜ்























0 Comments:

Post a Comment

<< Home