Monday, January 25, 2021

105 நல்குரவு

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

105 நல்குரவு

குறள் 1041:

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.


ஏழ்மையைக் காட்டிலும் ஏழ்மை எதுவென்றால்

ஏழ்மைதான் என்றுரைப்பார் செப்பு.

குறள் 1042:

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.


ஏழ்மை  வளைத்துவிட்டால் இப்போதும் எப்போதும்

வாழ்க்கையில் இன்பமில்லை செப்பு.

குறள் 1043:

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக

நல்குர வென்னும் நசை.


ஏழ்மையில் பேராசை வந்தால் பெருமையும்

வாழ்வின் புகழுமென்றும் பாழ்.

குறள் 1044:

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.


நற்குடியில் வந்தோர்க்கோ ஏழ்மை நிலைவந்தால்

சொற்பிறழ்வைச் சோர்வு தரும்.

குறள் 1045:

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.


ஏழ்மைத் துயருக்குள் பல்வேறு துன்பங்கள்

கோலோச்சிக் கொக்கரிக்கும் சொல்.

குறள் 1046:

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.


என்னதான் நல்லது சொன்னாலும் ஏழைகள்

சொன்னால் புறக்கணிப்பார் சொல்.

குறள் 1047:

அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.


ஏழ்மைப் பிடியில் அறம்பிறழ்ந்தால் 

அன்னியனாய்த்

தாயும் வெறுப்பாள் உணர்.

குறள் 1048:

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.


நேற்றென்னைக் கொன்றது போன்ற வறுமைவந்து

பற்றுமோ இன்றும்? விளம்பு.

குறள் 1049:

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பா டரிது.


நெருப்புக்குள் தூங்கலாம்! ஏழ்மைத் துடிப்பில்

வருமோதான் தூக்கம்? உரை.

குறள் 1050:

துப்புர வில்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.


ஏழை   துறவாமை, உப்புக்கும் கஞ்சிக்கும்

கேட்கும் நிலைக்காக வோ?



























0 Comments:

Post a Comment

<< Home