Saturday, January 23, 2021

101 நன்றியில் செல்வம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

101 நன்றியில் செல்வம்

குறள் 1001:

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்த தில்.


பெருஞ்செல்வம் சேர்த்தும் அனுபவிக் காமல்

இறப்பதில் என்னபயன் செப்பு?

குறள் 1002:

பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு.


பொருள்களால் எல்லாம் முடியுமென்றே எண்ணித்

தராதோன் பிறவி, இழிவு.

குறள் 1003:

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.


புகழைப் புறக்கணித்துச் செல்வத்தைச் சேர்ப்போர்

பிறப்பே நிலத்தின் சுமை.

குறள் 1004:

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.


எவரும் விரும்பாதோர் வாழ்ந்த பிறகு

எதுமிஞ்சும் என்றெண்ணு வார்?

குறள் 1005:

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய

கோடியுண் டாயினும் இல்.


கொடுத்து மகிழாதோர் கோடிகோடி செல்வம்

சிறைப்படுத்தி என்னபயன் சொல்?

குறள் 1006:

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்

றீத லியல்பிலா தான்.


தானும் அனுபவிக் காமல் பிறருக்கும்

ஈயாமல் செல்வத்தைக் காப்பவர் வாழ்விலே

நோயாவார் செல்வத்திற் கே.

குறள் 1007:

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.


வறியோர்க் குதவாத செல்வமோ மங்கை

தனித்திருந்து மூப்படைதல்  போல்.

குறள் 1008:

நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.


ஊரார் வெறுப்பவனின் செல்வங்கள் நச்சுமரம்

ஊர்நடுவே காய்த்ததுபோ லாம்.

குறள் 1009:

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.


அன்பை, அறவழியைத் தாண்டிக் குவித்தசெல்வம்

என்றுமே கொள்வார் பிறர்.

குறள் 1010:

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனைய துடைத்து.


செல்வந்தர்க் கேற்படும் ஏழ்மை மழைமேகம்

பொய்ப்பதைப் போன்ற நிலை.



























0 Comments:

Post a Comment

<< Home