94 சூது
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
94 சூது
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
வெற்றியே தந்தாலும் சூதை விரும்பாதே!
தொண்டையில் தூண்டில் இரைவிரும்பி முள்சிக்கித்
தத்தளிக்கும் மீன்நிலைதான் சாற்று.
குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
ஒருவெற்றி வந்த கவர்ச்சியில் நூறை
இழப்பவர்கள் வாழ்வாரோ கூறு?
குறள் 933:
உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
காயுருட்டிச் சூதாடிச் சேர்த்த பொருளெல்லாம்
தேய்ந்தே மறைந்துவிடும் செப்பு.
குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்.
துன்பத்தைத் தந்து புகழையும் சீரழித்து
வன்கொடுமை பந்தாடும் ஏழ்மையைச் சூதைப்போல்
தந்திட வேறில்லை சாற்று.
குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
சூதாட்டக் கூடத்தை, காயைப் பொய்த்திறனை
நாடியவர் என்ன இருந்தாலும் இல்லாமல்
ஆகிடுவார் வாழ்க்கையில் இங்கு.
குறள் 936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
சூது வலையிலே சிக்கியோர் உண்ணாமல்
வேதனையில் வாடுவார் சாற்று.
குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
சூதாடும் கூடத்தில் காலம் கழிப்பவரின்
சேர்த்துவைத்த செல்வமும் நற்பண்பும் என்றென்றும்
பாழாகும் நாசமாகும் சாற்று.
குறள் 938:
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது.
பொய்சொல்ல வைக்கும் அருள்மனத்தை மாற்றிவிடும்
துன்பத்தில் தள்ளிவிடும் சூது.
குறள் 939:
உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
புகழ்வாழ்க்கை, கல்வியுடன் செல்வம் உணவை
உடையை இழக்கவைக்கும் சூது.
குறள் 940:
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்.
பொருளை இழக்கவரும் சூதாட்ட ஆசையும்
பெருந்துன்பம் வந்தால் உயிராசை
கொள்தல்
இரண்டுமே ஒன்றுதான் பார்.
0 Comments:
Post a Comment
<< Home