Tuesday, January 19, 2021

93 கள்ளுண்ணாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

93 கள்ளுண்ணாமை

குறள் 921:

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.


போதைக் கடிமையெனில்  மாற்றாரும் அஞ்சமாட்டார்!

யாரும் மதிக்கமாட்டார் சொல்.

குறள் 922:

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்.


மதுவினத்தைத் தீண்டாதே! சான்றோர்

மதிப்பைப்

புறக்கணிப்போர் நாடலாம் தீது.

குறள் 923:

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.

குடிவெறி கொண்டவனைத் தாய்சகிக்க  மாட்டாள்!

சகிப்பாரா சான்றோர்? விளம்பு.

குறள் 924:

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

மதுமயக்கம் கொண்டவரை  நாணமென்னும்  மங்கை

வெறுத்தே விலகிடுவாள் சாற்று.

குறள் 925:

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.


பொருள்கொடுத்துப் போதை மயக்கத்தை வாங்கும்

கொடுமை அறியாமை வித்து.

குறள் 926:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.


தூங்குவோர்க்கும் செத்தவர்க்கும் வேறுபாடு இல்லையிங்கே!

கேடுகெட்ட போதை மதுகுடிப்போர்,

ஏற்றதும்

கூடறுக்கும் நஞ்சுண்போர் ஒன்று.

குறள் 927:

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்.


மறைந்து குடித்தாலும் கண்மயக்கம் கண்டே

நகைத்திடுவார் ஊரார்தான் சொல்.

குறள் 928:

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்

தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.


மதுவருந்தேன் என்றேதான் பொய்சொல்தல் வேண்டா!

மதுமயக்கம் காட்டிவிடும் மெய்.

குறள் 929:

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.


போதை வெறியனை வாழ்வில்  திருத்துவதும்

நீருக்குள் சென்றவனைத் தீப்பந்தம் ஏந்தியே

நீருக்குள் தேடுவதும் ஒன்று.

குறள் 930:

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.


குடிகாரன் தள்ளாடி வீழ்வதைப் பார்த்தே

குடிக்காதோன் கேடுண ரான்?


அருமை கவிராயர் பாபா அவர்களே!

எளிமை துள்ளுகிறது!👏👏👏

இமயவரம்பன்



























0 Comments:

Post a Comment

<< Home