100 பண்புடைமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
100 பண்புடைமை
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
தன்னுடன் யாரும் பழகிப் பேசுதல்
இங்கே எளிமையெனில் அத்தகைய
நல்வழியே
பண்புடைமை யாகும் உணர்.
குறள் 992:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
அன்பாய்ப் பழகுதல், நற்குடி வாழ்க்கை,
பண்புடைமை என்பதற்குச் சான்று.
குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
உறுப்புகளால் ஒத்திருத்தல் மாந்தரல்ல! பண்பால்
ஒருமித்தல் மாந்தராம் சொல்.
குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு.
நேர்மை அறங்களைப் போற்றிப் பயன்படுவார்
பண்பைப் புகழும் உலகு.
குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
விளையாட்டாய்க் கூட இகழாதோர் மாற்றார்
உளம்நோகப் பேசமாட்டார் கூறு.
குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
பண்புடையார் உள்ளதால் இவ்வுலகம் உள்ளது!
இன்றேல் புதைந்திடும் கீழ்.
குறள் 997:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.
அரம்போல கூர்மை அறிவிருந்தும் பண்பை
இழந்தோர் மரத்திற்கே ஒப்பு.
குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
நட்பின்றி தீமையே செய்வோ ரிடத்திலும்
பண்பின்றி வாழ்தல் இழுக்கு.
குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
நட்பாய்ப் பழகத் தெரியாமல் வாழ்பவர்க்குப்
பட்டப் பகலிலும் இவ்வுலகம் காரிருள்போல்
முற்றும் தெரியும் உணர்.
குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
பண்பிலார் செல்வமோ பாத்திரம் கெட்டதால்
வெண்பால் திரிந்ததுபோ லாம்.
0 Comments:
Post a Comment
<< Home