97 மானம்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
97 மானம்
குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
செய்தாக வேண்டுமென்ற போதிலும் தன்பெருமை
குன்றுவதைச் செய்யமாட்டார் இங்கு.
குறள் 962:
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
புகழ்வேண்டும் என்றே குடும்பப் பெருமை
தடம்புரளச் செய்யும் செயலைத் தவிர்ப்பார்!
குடிப்பெருமை மானமே மூச்சு.
குறள் 963:
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
உயர்ந்த நிலையில் பணிவு, சரியும்
நிலையில் பெருந்தன்மை நன்று.
குறள் 964:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
பெரியோர் தரந்தாழ்ந்தே மானம் இழந்தால்
தரையில் விழுந்த முடியாய் மதிப்பார்!
உயர்தரப் பண்பே மதிப்பு.
குறள் 965:
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
குணக்குன்றாய் உள்ளோர் இழிசெயல் தன்னை
மணியளவு செய்தாலும் தாழ்வார் நிலையில்!
குணப்பிறழ்வு வாழ்வின் சரிவு.
குறள் 966:
புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை.
இகழ்ச்சியை ஏற்றும் மரியாதை விட்டும்
புகழ்வருமா? என்னபயன் சொல்.
குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
மதியார்பின் சென்றேதான் வாழ்வதை விட்டே
அழிவினை ஏற்பது மேல்.
குறள் 968:
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
சாவா மருந்தில்லை! நம்பெருமை விட்டேதான்
வாழ்தல் இழிவென்றே சொல்.
குறள் 969:
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
முடிகள் உதிர்ந்தால் கவரிமா சாகும்!
மதிப்பிழந்தே மானம் இழந்தால் உயர்ந்தோர்
உயிர்நோக வாழமாட்டார் இங்கு.
குறள் 970:
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு.
மானம் இழக்கும் இழிநிலையில்
வாழாதோர்
சான்றாண்மை போற்றும் உலகு.
0 Comments:
Post a Comment
<< Home