Monday, January 25, 2021

104 உழவு

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

104 உழவு

குறள் 1031:

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.


தொழில்கள் செழித்தாலும் இந்த உலகம்

உழவால்தான் வாழ்கிறது! துன்பங்கள் ஏற்றும்

உழவே சிறந்த தொழில்.

குறள் 1032:

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா

தெழுவாரை எல்லாம் பொறுத்து.


தொழில்கள் எதுவெனினும் அன்னார் பசியை

உழவே தணித்தேதான் காப்பதால் இந்த

உலகுக்கச் சாணி உழவு.

குறள் 1033:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.


உழுதுண்டு வாழ்வோர் உழவர்! அவரைத்

தொழுதுண்டு வாழ்வார் பிறர்.

குறள் 1034:

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.


உழவர் உழைப்பால் வளமான நாட்டைப்

பலரும் விரும்பி அவர்குடைக் கீழே

நிழலில் வருவார் விழைந்து.

குறள் 1035:

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.


யாரிடமும் கேட்கமாட்டார் கேட்டால் கொடுத்திடுவார்

ஊராரைக் காக்கும் உழவு.

குறள் 1036:

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேமென் பார்க்கும் நிலை.


பற்றுகளைக்  கைவிட்டோர் கூட உழவர்கள்

பொற்கையை நம்பிவாழ்வார் செப்பு.

குறள் 1037:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்


புழுதி ஒருபலம் காற்பலம் ஆக 

உழுதால் எருவோ ஒருபிடி  இன்றிச்

செழித்து வளரும் பயிர்.

குறள் 1038:

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.


உழுவதினும் இங்கே உரமிடுதல் நன்று!

களையெடுத்தல் நீர்பாய்ச்சல் காட்டிலும் 

நாளும்

பயிர்காத்தல் சாலவும் நன்று.

குறள் 1039:

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்

தில்லாளின் ஊடி விடும்.

நிலத்தை உழவன்  கவனியாது வாழ்ந்தால்

மனைவிபோல் ஊடும் நிலம்.

குறள் 1040:

இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.


நிலமிருந்தும் ஒன்றுமில்லை என்றிருந்தால் அந்த

நிலமகளே பார்ப்பாள் நகைத்து.
































0 Comments:

Post a Comment

<< Home