Saturday, January 23, 2021

102 நாணுடைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

102 நாணுடைமை

குறள் 1011:

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற.


இழிசெயல் செய்ததற்கு நாணுதலும் 

மங்கை

இயல்பாக நாணுதலும் வேறு.

குறள் 1012:

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு.


உடையுணவு எல்லாம் பொதுவாகும்! மாந்தர்

சிறப்பியல்பே நாணம் உணர்.

குறள் 1013:

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்

நன்மை குறித்தது சால்பு.


இன்னுயிரும் ஊனும் இணைந்ததுபோல் 

சான்றாண்மைப்

பண்புடன் நாணமும் இங்கு.

குறள் 1014:

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்

பிணியன்றோ பீடு நடை.


சான்றோர்க் கணிகலனே நாணந்தான்! நாணமின்றிப்

பீடுநடை போடுவது நோய்.

குறள் 1015:

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்

குறைபதி என்னும் உலகு.


பிறரின் பழிக்கும் தனது பழிக்கும்

பதறியே நாணுபவர் நாணமென்னும் பண்பின்

உறைவிட மாவார் உணர்.

குறள் 1016:

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர்.


பெரியவர்கள் பாதுகாப்பாய் நாணத்தை ஏற்பார்!

உலகத்தை ஏற்கமாட்டார் சாற்று.

குறள் 1017:

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.


உயிர்காக்க நாணத்தைக் கைவிட மாட்டார்!

உயிர்விடுவார் மானத்தைக் காத்து.

குறள் 1018:

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்

அறநாணத் தக்க துடைத்து.


பழிகளுக்கு நாணாமல் வாழ்பவரை விட்டே

விலகும் அறம்நாணித் தான்.

குறள் 1019:

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்

நாணின்மை நின்றக் கடை.


கொள்கை பிறழ்ந்தால் குடிக்கழிவு! நாணமற்ற

தன்மையோ நன்மைக்குக் கேடு.

குறள் 1020:

நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.


உள்ளத்தில் நாணமற்றோர்  வாழ்வும்

மரப்பொம்மை

பொம்மலாட்டக் காட்சியும் ஒன்று.
























0 Comments:

Post a Comment

<< Home