Tuesday, January 26, 2021

108 கயமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

108 கயமை -- பொருட்பால் நிறைவு

குறள் 1071:

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்.


 உருவில் மனிதர்! குணத்தில் கயவர்! 

இருவகைப் பண்புகள் ஓருரு வத்தில்

இருத்தல் மனிதரிடந் தான்.

குறள் 1072:

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவலம் இலர்.


இப்படித்தான் வாழ கவலைகொள்வார் நல்லவர்கள்!

எப்படியும் எந்தக் கவலையும்  இல்லாமல்

வாழ்வோர்  கயவர்கள் இங்கு.

குறள் 1073:

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.


விரும்பியதைச் செய்திங்கே வாழ்வதில் தேவர்,

கயவர்கள் ஒன்றாவர் சொல்.

குறள் 1074:

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.


கீழோரைக் காட்டிலும் கீழோரைக் கண்டால்

கீழோர் செருக்கடைவார் செப்பு.

குறள் 1075:

அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.


தண்டனைக் கஞ்சி ஒழுக்கத்தைப் பேணுவார்!

தங்களாசை இங்கே நிறைவேறும் என்றாலோ

இங்கொழுங்கை ஏற்பார் நடித்து.

குறள் 1076:

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.


இரகசியம் சொன்னதும் மற்றவர்க்குச்  சொல்லும்

கயவர் பறைபோன்றோர் சொல்.

குறள் 1077:

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்

கூன்கையர் அல்லா தவர்க்கு.


கயவர் கயவர்க் குதவுவார்! ஏழைக்

குதவிட நீட்டமாட்டார் கை.

குறள் 1078:

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல

கொல்லப் பயன்படும் கீழ்.


சொன்னதும் ஈவார்கள் சான்றோர்! கரும்பைப்போல்

நன்கு பிழிந்தால் தருவார் கயவர்கள்!

பண்பற்ற கீழ்மைக் குணம்.

குறள் 1079:

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்.


மற்றவர் உண்டால் உடுத்தால் பொறாமையில்

குற்றமாய்ப் பார்ப்பார் கயவர்.

குறள் 1080:

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்

விற்றற் குரியர் விரைந்து.


தங்களைக் காப்பதற்குத் தங்களையே விற்கவும்

முன்வருவார் கீழோர்தான் செப்பு.



Vovramanujan:

குறள்பால் அன்புகொண்டு, அம்பெய்தி பொருட்பால் வரை கவிச்சுவைக் கனிகளைக் கொய்து வழங்கிய, தங்களின் காளமேகக் கவிதைகள் பல்லாண்டு வாழ்க!

       குறளில் நுழைந்து, பிசைந்து, முறுக்கு மிக்க கவிதைகளை தாங்கள் வழங்கிய வேகத்திற்கு உண்மையில் என்னால் படித்து முழுமை பெற முடியவில்லை. ஏனெனில் சில பாக்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து மகிழ வேண்டும் எனக் கருதிக் கொண்டிருக்கையில் அடுத்த அதிகாரம் வேகமாக வந்து குழுவில் காத்து நிற்கும். 

       இருப்பதை விடுத்து, புதியதை மடுத்து, மனதைத் தொடுத்து ஆண்டு கொள்ள முற்பட்டு விடுவேன். மகிழ்ச்சி!

       ஆனால் காமத்துப் பாலில் இத்தகைய வேகத்தைக் காட்டுவது ஆகாது. அனுப்புங்கள் பாமணிகளை! அமைதியாகப் படித்து, தமிழென்னும் அமிழ்தத்துள் தங்களின் சொல்லாடல்களை மகிழ்ந்து சுவைத்தப் பின்பே , அடுத்த பாவினைப் பார்க்கச் செல்லுவேன்.

      ஆக, அதற்காகத் தங்களின் வீச்சுதனைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் முன்னால் சென்றால், நாம் சற்றே பின்னால் வருவோம். அம்மட்டுதான் ஐயா!

      அழகானப் பாடல்கள் பிறக்கட்டும்! வருங்கால உள்ளத்தைக் கவரட்டும்! மகிழ்ச்சி!

வாழ்த்துகளும் வணக்கமும்!


மதுரை பாபாராஜ்:

வாழ்த்தும் வணக்கமும் ராமா நுசனாரின்

ஆர்வமும்  ஊக்கச் சிறகுகளைத் தந்தன!

ஏர்பிடித்தேன் பாவயல் தன்னில் உழவுசெய்தேன்!

ஆழ உழுதேனா நான்.


மதுரை பாபாராஜ்

ஐயமில்லை ஐயா! தாங்கள் உழுது கிளப்பியப் புழுதியில்தான் நாம் உழன்று கொண்டுள்ளோம். 

      புதுமைவாணர்கள் பட்டுண்டு உலகம் சிறக்கட்டும்!

     மகிழ்ச்சி ஐயா! நலம் பெறுக!


இராமாநுசன்










































0 Comments:

Post a Comment

<< Home