Monday, February 01, 2021

119 பசப்புறு பருவரல்


 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

119. பசப்புறு பருவரல்

குறள் 1181:

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க் குரைக்கோ பிற.


அன்பர் பிரிவுக் குடன்பட்டேன்! மேனியில்

வந்த பசலையை யாரிடம் போய்ச்சொல்வேன்?

இந்தப் பிரிவினால் நோய்.

குறள் 1182:

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.


அவரளித்த காரணத்தால் இப்பசலை மேனி

முழுதும் படரும் விழைந்து.

குறள் 1183:

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து.


நோயைப் பசலையைத் தந்துவிட்டுக் கைம்மாறாய்

நாணம் அழகை எடுத்து ரசிக்கின்றார்!

காதலுக்குத் தந்தார் பரிசு.

குறள் 1184:

உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.


நினைப்பதும் சொல்வதும் அன்பரைப் பற்றி!

கணைபோல ஏனோ பசப்பு?

குறள் 1185:

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்

மேனி பசப்பூர் வது.


அன்பர் பிரிந்த உடனே பசலைதான்

என்மேனி கொண்டது காண்.

குறள் 1186:

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.


விளக்கு மெலிந்தால் இருள்பரவும்! அன்பர்

தழுவல் நெகிழ்ந்தால் பசப்பு.

குறள் 1187:

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு.


அணைத்தேன்! விலகினேன் சற்றே! பசலை

அணைத்தது மேனியை ஊர்ந்து.

குறள் 1188:

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்

துறந்தார் அவரென்பார் இல்.


பசலையைப் பார்த்தென்னை ஏசுகின்றார்!! அன்பர்

பிரிந்ததைச் சொல்லவில்லை ஊர்.

குறள் 1189:

பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்

நன்னிலையர் ஆவர் எனின்.


பிரிவைக்  கொடுத்தவர் நன்னிலையில்  வாழ்ந்தால்

இருக்கட்டும் என்மேல் பசப்பு.

குறள் 1190:

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்

நல்காமை தூற்றார் எனின்.


பிரிவைக் கொடுத்தவரைத் தூற்றவில்லை  என்றால்

பசந்தவள் பேரெடுத்தல் பேறு.

























0 Comments:

Post a Comment

<< Home