Sunday, January 31, 2021

117 படர்மெலிந்திரங்கல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

117 படர்மெலிந்திரங்கல்

( துன்பத்தால் மெலிந்து புலம்பல்)

குறள் 1161:

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்

கூற்றுநீர் போல மிகும்.


இறைக்க இறைக்கவே ஊறிவரும் ஊற்று!

மறைக்க மறைக்க வெளிவரும் 

காதல்!

தடைகள் தடையல்ல சாற்று.

குறள் 1162:

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்

குரைத்தலும் நாணுத் தரும்.


துன்பத்தை என்னால் மறைக்க  முடியவில்லை! 

அன்பரிடம் சொல்வதற்கோ நாணம் 

தடுக்கிறது!

என்னென்பேன் என்னிலை சொல்.

குறள் 1163:

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்

நோனா உடம்பின் அகத்து.


காதலும் நாணமும் காவடித் தண்டுபோல்

ஊசலாட்டம் கொள்கிறது பார்.

குறள் 1164:

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல்.


காதல் கடலைக் கடப்பதற்குத்

தோதான

தோணிதான் இல்லை எனக்கு.

குறள் 1165:

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர்.


காதலில் உள்ளபோதே துன்பம் தருகின்றார்!

மோதலில் என்னசெய்வா ரோ?

குறள் 1166:

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது.


காதல் மகிழ்ச்சி கடல்போல் பெரிதுதான்!

வேதனைமுன் முற்றும் சிறிது.

குறள் 1167:

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன்.


காதல் கடலினை நீந்திக் கரைகாணேன்!

தூங்கவில்லை நள்ளிரவுப் போழ்து.

குறள் 1168:

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்ல தில்லை துணை.


உலகினைத் தூங்கவைத்தே இந்த இரவு

தனிமையில் உள்ளது! நான்தான் இதற்குத்

துணையானேன்! யாருமில்லை வேறு.

குறள் 1169:

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா.


இரவிங்கே நீளும் கொடுமை, தலைவன்

பிரிவுக் கொடுமைக்கும் மேல்.

குறள் 1170:

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோவென் கண்.


என்னவர் ஊருக்கோ என்மனம்போல்

கண்களும்

சென்றால்  கண்ணீர்சிந் தாது.




























0 Comments:

Post a Comment

<< Home