யாவரும் கேளிர்.
யாவரும் கேளிர்!
விட்டுக் கொடுக்கும் மனப்பண்பை நாள்தோறும்
கற்றுக் கொடுக்கின்ற கூட்டுக் குடும்பத்தை
விட்டுக் கொடுத்ததால் தீவுத் திடல்களாய்
மக்கள் பிரிந்தேதான் வாழ்கின்றார் அங்கங்கே
சொந்த உறவுகளை விட்டு.
அன்றைய வாழ்க்கை முறைவேறு! வாழ்க்கையில்
இன்றைய வாழும் முறைவேறு! மாற்றங்கள்
கொண்டுவரும் சூழ்நிலைக் கேற்ப
வளையவேண்டும்!
என்றும் அனுசரித்தல் நன்று.
வளையாமல் நாமோ வளைக்க நினைத்தால்
வளைக்க முடியாமல் தத்தளிக்கும் வாழ்வு!
மலைக்கவைத்த போதும் மனிதர்கள் வாழும்
நிலையெடுத்தார் நாளும் துணிந்து.
உள்ளூர் வெளியூர் தமிழ்நாடு வேறிடங்கள்
உள்நாடோ இல்லை வெளிநாடோ என்றேதான்
இவ்வுலகில் எங்கெங்கோ யாவரும் கேளிரென்று
உள்ளத்தால் வாழ்கின்றார் சேர்ந்து.
சொந்த உறவுகளை விட்டுப் பிரிந்தேதான்
வந்த உறவுகளை ஏற்று மகிழ்கின்றோம்!
சொந்தமோ வந்ததோ வேற்றுமை பாராமல்
ஒற்றுமையாய் வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home