திருக்குறள் சிறப்புகள்!
திருக்குறள் சிறப்புகள்!
கந்த சஷ்டி கவசம் பாடல் ராகம் முயற்சி!
நேரிசை வெண்பா
படிப்போர்க்(கு) எதிர்மறைபோம்
சோம்பல்போம் வாழ்வில்
படிப்போர்க்கு நேர்மறை எண்ணம்
வளர்ந்தோங்கும்
நன்மைகள் கைகூடும் வள்ளுவத்தை ஏற்றேதான்
அன்றாடம் பின்பற்று வோர்க்கு.
குறள் வெண்பா
குறள்நெறி போற்று தழைக்கும் அமைதி
அருமையாய் வாழ்தல் இலக்கு.
நூல்
குறள்களைப் புரிந்து தினமும் படித்தால்
சிறப்புடன் வாழ்வோம் ஏற்றம் பெறுவோம்
வரிகள் இரண்டில் வளமிகு கருத்து
தெளிவாய் உண்டு உணர்வீர் நன்கு(2)
பாயிரப் பகுதியில் கடவுள் வாழ்த்து
வானின் சிறப்பு நீத்தார் பெருமையும்
அறன்வலி யுறுத்தல் என்றே தொகுத்தார்
அருமை அருமை வள்ளுவம் அருமை
அறத்தில் தொடங்கி இன்பம் வரைக்கும்
சிறந்த வள்ளுவம் பெருக பெருக
சிறப்புடன் நாளும் வளர்க வளர்க
குறள்களை வாழ்த்த நினைப்போர் வருக
இல்லற வியலைத் தந்தவர் வருக
இல்வாழ்க்கை அமைத்த வள்ளுவர்வருக
வாழ்க்கைத் துணைநலம் வடித்தவர் வருக
மக்கட் பேறுதந்த மகானே வருக
அன்புடை மைதனை அமைத்தவர் வருக
விருந்தோம்பல் சொன்ன வித்தகர்வருக
இனியவை கூறல் செய்ந்நன்றி யறிதல்
நடுவு நிலைமை அதிகாரம் இங்கே
பன்னிரண் டாகும் பாசமுண் டாகும்
அடக்கம் உடைமை ஒழுக்கம் உடைமை
சிறப்பாய்க் காக்கும் என்றவர் வருக
பிறனில் விழையாமை பொறையு டைமை
அழுக்கா றாமை வெஃகா மையும்
புறங்கூ றாமை பயனில சொல்லாமை
தீவினை யச்சம் ஒப்புர வறிதல்
ஈகையும் புகழுக் கடுத்தது போற்றும்
துறவற வியலைத் தந்தவர் வருக!
அருளுடை மையும் புலாலை மறுத்தலும்
தவமும் கூடா ஒழுக்கத் தொடர்பும்
கள்ளாமை வாய்மை வெகுளா மையும்
இன்னாசெய் யாமை கொல்லா மையும்
நிலையாமை துறவு மெய்யுணர் தலுமே
அவாவை அறுத்தல் ஊழுடன் இவ்வியல்
முப்பத் தெட்டு அதிகா ரங்கள்
நற்றமிழ் மணிகள் அணிகல னாகும்!
பொருட்பால் அரசியல் அதிகா ரங்கள்
இறைமாட்சி கல்வியும் கல்லா மையும்
அறிவு டைமை குற்றங் கடிதல்
செறிவாய்ப் படைத்தார் நிமிரச்செய்தார்!
பெரியார் துணையும் சிற்றினம் தவிர்த்தல்
தெரிந்து செயல்வகை வலியறி தலுடன்
கால மறிதல் இடனறி தலுடன்
தெரிந்து தெளிதல் தெரிந்துவினை யாடலும்
வகுக்கும் வகுக்கும் வழிமுறை வகுக்கும்
சுற்றந் தழாலும் பொச்சாவா மையும்
செங் கோன்மை தந்தார் இங்கு!
கொடுங் கோன்மை வெருவந்த செய்யாமை
கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்க முடைமை
மடி யின்மை ஆள்வினை உடைமை
இடுக்கண் அழியா மைதா னென்றே
அடுத்தது அங்க வியலாய்ப் படைத்தார்
அமைச்சுக் கடுத்து சொல்வன்மை தந்தார்
வினைத் தூய்மை வினைகளில் திட்பம்
அனைத்தும் விழிபோல் காக்கவென் றாரே!
வினைசெயல் வகையும் தூதும் காக்க
மன்னரைச் சேர்ந்தே ஒழுகலைத் தந்தார்
குறிப்பறி தலுடன் அவையறி தலுமே
அவையஞ் சாமை அறிஞரைக் காக்க
நாடும் அரணும் மக்களைக் காக்க
பொருள்செயல் வகையோ வளத்தைக் காக்க
படைமாட் சியாலோ படைப்புகழ் காக்க
படைச்செருக் குடனே பெருமையைக் காக்க
நட்பும் நட்பா ராய்தலும் காக்க
பழைமை நட்பின் நெருக்கத்தைக் காட்ட
தீநட்பு வாழ்வின் தீமையைக் காட்ட
கூடா நட்போ கேட்டினைக் காட்ட
பேதைமை அறியா மைதனைக் காட்ட
புல்லறி வாண்மை நடிப்பினைக் காட்ட
இகலோ என்றும் வெறுப்பைக் காட்ட
பகைமாட்சி பகைவர் திறனைக் காட்ட
பகைத்திறம் தெரிதல் பகைவரைக் கணிக்க
உட்பகை எல்லாம் மனிதரைக் காட்ட
பெரியாரைப் பிழையாமை அறநெறி காட்ட
பெண்வழிச் சேறல் நல்வழி காட்ட
வரைவின் மகளிர் சலனத்தைக் காட்ட
கள்ளுண் ணாமை கெடுதியைக் காட்ட
சூததி காரம் பாழ்நிலை காட்ட
மருந்தோ உடல்நலம் பேணுதல் காட்ட
ஒழிபியல் எல்லாம் பொதுநெறி காட்ட
குடிமை மக்கள் இயல்பினைக் காட்ட
மானம் நிலையில் நிலைப்பதைக் காட்ட
பெருமை எல்லாம் தன்மையைக் காட்ட
சான்றாண் மையோ பண்பினைக் காட்ட
பண்புடை மையில் பண்புதுணை யாக
நன்றியில் செல்வம் வீணெனக் காட்ட
நாணுடை மையோ வெட்கத்தைக் காட்ட
குடி செயல் வகையோ குடும்ப நலன்தான்
உழவு என்பது பயிரின விளைச்சலே
நல்குர வென்பது வறுமை நிலைதான்
இரவு நிலையோ கேட்டுப் பெறுவது
இரவச்சம் என்பதோ கேட்கவே அஞ்சுதல்
களவியல் பகுதியில் ஏழதி காரம்
தகையணங் குறுத்தல் மங்கையின் அழகாம்
குறிப் பறிதலிலே உள்ளத்தின் பேச்சாம்
புணர்ச்சி் மகிழ்தலோ தழுவிடும் மகிழ்ச்சியாம்
நலம்புனைந் துரைத்தல் அழகை உயர்த்தல்
காதற் சிறப்போ காதலைப் புகழ்தலாம்
நாணுத் துறவுரைத் தலோ நாணம் நீங்கலாம்
அல ரறி வுறுத்தல் அனைவரும் அறிதல்
கற்பியல் அதிகாரம் பதினெட் டாகும்
பிரிவாற் றாமை பிரிவுத் துயராம்
படர்மெலிந் திரங்கல் ஏக்க நிலையாம்
கண்விதுப் பழிதல் கண்ணீர் ததும்பலாம்
பசப்புறு பருவரல் பசலை படர்தல்
தனிப்படர் மிகுதி தனிமைத் துயராம்
நினைந்தவர் புலம்பல் சோக நினைவாம்
கனவுநிலை யுரைத்தலோ கனவைச் சொல்தலாம்
பொழுதுகண் டிரங்கலில் ஏக்கப் பெருமூச்சு
உறுப்புநலன் அழிதலில் உறுப்பழ கிழத்தல்
நெஞ்சொடு கிளத்தல் தனித்துப் புலம்பல்
நிறையழி தலோ வேட்கை நிலையாம்
அவர்வயின் விதும்பல் மனதின் விரைவாம்
குறிப்பறி வுறுத்தல் இருவரும் உணர்தல்
புணர்ச்சி விதும்பலோ சேர விழைதலாம்
நெஞ்சொடு புலத்தல் மனதைச் சாடல்
புலவி என்பதோ அன்பால் ஊடுதல்
புலவி நுணுக்கம் ஊடலின் கோபம்
ஊடல் உவகை ஊடலால் மகிழ்ச்சி
இத்துடன் அதிகா ரங்கள் நிறைவாம்
பற்று பற்று குறள்களைப் பற்று
முற்றும் வாழ்க்கை நெறிகளைப் பற்று
எட்டுத் திக்கும் குறள்களைச் சொல்லு
பக்குவப் படுத்தும் நல்லற மாகும்!
கற்றுக் கற்று குறள்களைக் கற்று
கற்றதற் கேற்ப நிற்பது நன்று
எத்தனை முறைகள்குறள்களைப் படித்தும்
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புரிதல்
தமிழெனும் சொல்லோ குறளில் இல்லை
திருக்குறள் முதல்பெயர் முப்பா லாகும்
அறம்பொருள் இன்பம் முப்பா லாகும்
உலகப் பொதுமுறை திருக்குற ளாகும்
அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும்
ஒவ்வொரு குறளும் ஈரடி யாகும்
ஈரடி களிலே ஏழுசீர் வருமே
மொத்தச் சொற்கள் பதினா லாயிரம்
தமிழின் எழுத்தில் முப்பத் தேழு
இடம்பெற வில்லை அறிந்து கொள்வோம்
இடம்பெற்ற மலர்கள் அனிச்சம் குவளை
இடம்பெற்ற ஒருபழம் நெருஞ்சிப் பழமாம்
இடம்பெற்ற ஒருவிதை குன்றி மணியாம்
இடம்பெறா உயிரெழுத்தோ ஔதான் அறிக
இருமுறை வருவது குறிப்பறி தலாகும்
இரண்டு மரங்கள் பனையும் மூங்கிலும்
குறளில் அதிகம் வருவது னி எழுத்தாகும்
பற்று என்றசொல் ஆறுமுறை உண்டு
ளீ ங எழுத்துக்கள் ஒருமுறை வருமே
தமிழும் கடவுளும் இடம்பெறா சொற்களாம்
முதன்முதல் அச்சிட்டார் ஞானப் பிரகாசர்
முதலுரை தந்தவர் மணக்குட வர்தான்
ஆங்கில மொழியில் தந்தவர் போப்தான்
பரிமே லழகர் பத்தாம்உரை ஆசானாம்
இடம்பெறா ஒரே எண் ஒன்பது ஆகும்
ஏழுஇடம் பெற்றது கோடி எனும்சொல்
எழுபது கோடி வருவதோ ஒருமுறை
எட்டுக் குறளில் வருமெண் ஏழாம்
திருக் குறள் இதுவரை வந்தது பலமொழி
ஆங்கில ஆக்கம் நூற்றுக்கும் மேலாம்
குறவர்கள் வக்போலி மொழியாக்கம் உண்டு
இப்படிச் சிறப்புகள் ஏராளம் உண்டு
வள்ளுவர் கோட்டம் சென்னையில் உண்டு
வள்ளுவர் சிலையோ குமரியில் உண்டு
எத்தனை அமைப்பு எத்தனை அறிஞர்கள்
குறள்களை ஆய்ந்து தொண்டுகள் புரிகின்றார்
இரண்டா யிரந்தான் ஆண்டுகள் முடிந்தும்
இன்றும் வாழ்வை இயக்கும் குறள்நெறி
பொருத்தம் என்றே உணர்ந்தோம் உண்மை!
குறளின் கருத்தில் இல்லாத தில்லை
இருப்பதில் எல்லாம் நிறைவாய் உண்டு
அகரம் மொழியின் முதல்தான் என்றார்
நீரின்றி அமையா துலகம் என்றார்
ஆசையை நீக்குதல் பெருமை என்றார்
அறவழிச் சிறப்பே புகழ்தரும் என்றார்
இல்லறக் கடமையைப் போற்றிடச் சொன்னார்
வாழ்க்கைத் துணையின் கடமையைச் சொன்னார்
பெற்றோர் குழந்தைகள் கடமையைச் சொன்னார்
உயிரின் இயக்கம் அன்பெனச் சொன்னார்
விருந்தினர் பேணும் வகைகள் சொன்னார்
இன்சொல் பொழியும் நன்மைகள் சொன்னார்
நன்றி மறவாத பண்புகளைச் சொன்னார்
வேண்டியோர் வேண்டாதோர் நடுநிலை சொன்னார்
அடக்கம் அமரருள் உய்க்கும் என்றார்
ஒழுக்கம் உயிரினும் மேல்தான் என்றார்
பிறன்மனை நாடலைச் சாடி நிமிர்ந்தார.
தவறைப் பொறுத்தல் தன்மை என்றார்
பொறாமை உயர்வைத் தராது என்றார்
பிறர்பொருள் ஆசை சிறுமை என்றார்
புறணி பேசுதல் இழிவே என்றார்
பயனற்ற சொல்லை ஒதுக்கச் சொன்னார்
தீய செயல்செய்ய பயப்படச் சொன்னார்.
உலகுடன் ஒட்டி வாழ்ந்திடச் சொன்னார்
ஏழைகள் வாழ கொடுத்திடச் சொன்னார்
கொடுப்பதால் வரும்புகழ் நிலைக்கும் என்றார்
இரக்க உணர்வே மனிதம் என்றார்
புலாலை மறுத்தல் நல்லது என்றார்
தன்னலம் துறத்தல் தவங்கள் என்றார்
வேடத் துறவறம் துன்பம் என்றார்
இப்படி வாழ்ந்தால் போற்றுவார் என்றார்
திருட நினைப்பதே குற்றம் என்றார்
மனத்தூய்மை பெறுதல் உண்மையால் என்றார்
சினத்தைப் போன்ற பகைவனில்லை என்றார்
தீமை செய்தவர்க்கு நன்மைசெய் என்றார்
கொல்லாத அறநெறி ஒழுக்கநெறி என்றார்
உறங்குவது சாவாம் விழிப்பதே பிறப்பென்றார்
ஆசையை அறுத்தலே துறவாகும் என்றார்
எப்பொருள் என்றாலும் உண்மை உணரென்றார்
ஆசையே அழிவிற்குக் காரணம் என்றார்
இன்பமும் துன்பமும் இயல்பே என்றார்
அறத்துப் பால்வழி வாழ்வை அமைப்போம்
நிலையான புகழை வாழ்வில் அடைவோம்
நிறைவான வாழ்வில் நிம்மதி காண்போம்
பொருட்பால் கருத்தை மனதில் பதிப்போம்
அரசுக் குரிய இலக்கணம் அறிவோம்
வாழ்க்கைப் பண்பின் மாண்பை அறிவோம்
வேண்டிய குணங்கள் வேண்டாத குணங்கள்
உயர்வைக் கொடுப்பதும் தாழ்வைக் கொடுப்பதும்
உணர்ந்து நடந்தால் சிகரம் தொடலாம்
சிந்தனை தன்னில் களங்கம் வேண்டாம்
அறவுரை ஏற்று வளங்கள் பெறுவோம்!
இன்பத்துப் பாலை இயல்பாய் உணர்வோம்!
விட்டுக் கொடுக்கும் விவேகம் உணர்வோம்!
எல்லைக்குள் வாழும் இலக்கணம் அறிவோம்!
வள்ளுவம் போற்றி வாழ்வில் உயர்வோம்!
கற்போம் கற்போம் குறள்களைக் கற்போம்
நிற்போம் நிற்போம் குறள்வழி நிற்போம்!
மதுரை பாபாராஜ்
கருத்துகள்:
அருளுடையீர் வணக்கம்
அதிகாரங்களை முன்வைத்த தங்கள் பாடல் அருமை:
பாடிய திருமதி ஜெயசரசுவதி
அவர்கள் குரலும் அருமை.
Dr. மோகனராசு
நல்ல கருத்தாக்கம்.
இயல் பெயர்களை ஆங்காங்கே மணக்குடவரை பின்பற்றி , கூடவே இயல் சாரத்தை யும் சொன்னால் நன்றாக இருக்கும்.
மணக்குடவருக்கு முன்பே உரையாசிரியர்கள் உண்டு.. கிடைத்த உரைகளில் அதுவே பழமையானது
அதிகாரம்
குறள் சிறப்பு
குறள் சாரம்..
இப்படிச் செல்கிறது
நன்று
CR
கனியன்கிருஷ்ணன்,
தென்காசி
அவர்களின் வாழ்த்து:
ஐயா,பாடலைக் கேட்டுப்
பரவசமடைந்தேன்.தாங்கள்
வள்ளுவரை கந்தனாகவே
ஆக்கி விட்டீர்கள்.
0 Comments:
Post a Comment
<< Home