Thursday, July 04, 2024

ஐயா முனைவர் கு.மோகனராசு

 ஐயா கு.மோகனராசு அவர்களின் ஆசிகள்:


முனைவர் ஐயா கு.மோகனராசு அவர்களின் ஆய்வுரை:


திருக்குறள் 'பா' வகை உரைகள் - ஒரு புள்ளிவிவரப் புறநிலைப் பார்வை 


2.  வெண்பா  வடிவ உரை நூல்கள் 


கவிஞர் மதுரை பாபாராஜ் அவர்கள், 2006- இல், 145 குறள்களுக்கு நேரிசை வெண்பாக்கள் எழுதி,                 'திருக்குறள் பேழை' என்னும் உரை நூலாக வெளியிட்டுள்ளார்கள்.


 பின்னர், தம் துணைவியார் மற்றும் நண்பர்கள் தந்த ஊக்கத்தால்,  திருக்குறள் அறத்துப்பால் - வெண்பாப் பாங்கில் கவிதை விளக்கம்' 

'திருக்குறள் பொருட்பால் - வெண்பாப் பாங்கில் கவிதை விளக்கம்' 

' திருக்குறள் இன்பத்துப்பால் - வெண்பாப் பாங்கில் கவிதை விளக்கம்' 

என்னும் மூன்று திருக்குறள் உரை நூல்களை 2008 - இல் வழங்கியுள்ளார்கள். 



ஒவ்வொரு குறளுக்கும் ஒரு நேரிசை வெண்பா என 1330 நேரிசை  வெண்பாக்களை உரைகளாக வழங்கியுள்ளார்கள். 



கவிஞர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள்' திருக்குறள் உரை வெண்பாவும் ஆய்வுரையும்- அறத்துப்பால்' என்னும் நூலை 2011 - இல் வெளியிட்டுள்ளார்கள்.  மொத்தம் 380 நேரிசை வெண்பாக்கள். ஒவ்வொரு வெண்பாவையும் அடுத்து, சில சொற்பொருள் விளக்கங்கள், இலக்கணக் குறிப்புகள் போல்வனவற்றையும் வழங்கியுள்ளார்கள். 



திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரக் கருத்துகளையும் இயன்றவரை தொகுத்து, அவற்றை ஒவ்வொரு நேரிசை வெண்பாவாக மொத்தம் 133 வெண்பாக்களை  கவிஞர்கள் இருவர் வழங்கியுள்ளனர்


அவர்களுள் ஒருவர், கவிச்சிங்கம் கண்மதியன் அவர்கள். இவர் வழங்கிய 'குறளமுதம்' என்னும் நூல் 1976-இல் வெளிவந்துள்ளது. 


மற்றொருவர் பாவலர் தமிழப்பன் அவரகள். இவர் வழங்கிய 'குறளதிகாரம்' என்னும் நூல் 1995-இல் வெளிவந்துள்ளது. 



அ. அண்ணாமலையார் அவர்கள், 'பொய்யாமொழியுள் புதுமையான மலர்ச்சி'  ( ஆண்டு இல்லை) என்னும் தம் நூலில்' திருக்குறள் வினா விடை வெண்பா' என ஒரு பகுதி அமைத்து, 133 அதிகாரங்களுக்கு 133 நேரிசை வெண்பாக்கள் படைத்துள்ளார். 


இதில், ஓர் அதிகாரத்தில் வரும் ஒரு குறளை வினாவாக்கி, அதே அதிகாரத்தில் வரும் இன்னொரு குறளை விடையாக்கியுள்ளார். 


இது நல்ல புதுமையான முயற்சி. 



புலவர் சி. துரைசாமி அவர்கள், தாம் வழங்கிய 'திருக்குறள் வெண்பா' என்னும் நூலில்  133 திருக்குறள் அதிகாரத் தலைப்புகளில் 133 நேரிசை வெண்பாக்களைப் படைத்துள்ளார்கள். இதில், திருக்குறள் கருத்துகளுக்கு ஓரளவு இடம் தந்து தம் கருத்துகளுக்குப் பேரளவு இடம் தந்துள்ளார்கள். 


ஆக, திருக்குறள் முழுமைக்கும் ஒருவரும், அறத்துப்பாலுக்கு ஒருவரும், ஓர் அதிகாரத்திற்கு ஒரு வெண்பா என நால்வரும் நேரிசை வெண்பாவால் உரையும் அதிகாரத் தொகுப்புரைகளும் வழங்கியுள்ளதைக் காணுகிறோம். 


திருக்குறள் முழுமைக்கும் நேரிசை வெண்பாக்களால் முதன்முதல் உரை கண்டவர் என்னும் பெருமிதம் கவிஞர் பாபாராஜ் அவர்களுக்கு உண்டு. 


- கு. மோகனராசு

0 Comments:

Post a Comment

<< Home