இதுவா விடியல்?
உழவரின் அசைவுகள் ஒளிக்கதிர்ச் செல்வனை
உசுப்பிட விழித்தெழுந்தான்!
விழித்தவன் கதிர்களை விருப்புடன் மண்ணக
வெளியினில் படரவிட்டான்!
கழிந்தது காரிருள்! கலையெழில் விடியலும்
கனிந்ததை எடுத்துரைத்தான்!
விழித்தனர்!எழுந்தனர்!செழிப்பினில் வாழ்பவர்
விதைத்தனர்!எழுச்சியினை!
இப்படி ஒருவகை எழுச்சியை உலகினில்
எழுதிய கதிரவனும்
அப்புறம் குடிசையில் அழுதிடும் அரும்புகள்
அருகினில் நெருங்கிநின்றான்!
கப்பிய துயரமும் கவ்விய சோகமும்
கைகளைத் தட்டிநிற்க
எப்படி எழுந்திட இயன்றிடும் கதிரவா
என்றதும் உருகிவிட்டான்!
பொன்னிற விடியலின் பொன்மயத் துகள்களில்
புரள்வதும் ஒருவர்க்கம்!
அனல்நிற விடியலின் அனற்கரம் சிறையிட
அழுவதும் ஒருவர்க்கம்! நற்
இனிவரும் நாளினில் இவ்வகை இருநிலை
இருப்பதும் இழிவென்பேன்!
முனைந்திடு! சமநிலை முகிழ்த்திடச் செய்வது
முயற்சியின் வழிஎன்பேன்!
மதுரை பாபாராஜ்
1989
0 Comments:
Post a Comment
<< Home