Friday, December 12, 2008

சிறுமையைப் பொசுக்கும் தீ!

அன்றொரு நாளினில் எட்டய புரததினில்
அழகிய அரும்பொன்று
தன்னொளி சிந்தியே தவழ்ந்தது தரணியில்
தழைத்தது படிப்படியாய்!
சின்னவன் வளர்ந்ததும் சிந்தனை விளக்கினை
சீருடன் ஏந்திநின்றான் !
அந்நியர் நடுங்கிட அனல்வரிக் கவிதையை
அள்ளியே வீசிநின்றான்!

வறுமையின் பிடியினில் வதைபடும் நிலையிலும்
வாட்டமோ கொண்டதில்லை!
தறுதலைப் போலொரு தனிநிலை எடுத்திவன்
தன்னிலை இழந்ததில்லை!
சுறுசுறுப் பாகவே சுடர்விழி சுழன்றிடும்!
சூறையும் தோற்றுவிடும்!
முறுக்கிய மீசையும் முழுத்தலைப் பாகையும்
முழுக்கவி பெயர்சொல்லும்!

இந்தியத் தாயவள் அடிமைச் சங்கிலி
உடைவது மட்டுமல்ல
இந்தியர் வாழ்வினில் இறுகிய ஏனைய
இழிநிலைச் சங்கிலிகள்
தந்திடும் துயரமும் தகர்ந்திட வழிமுறை
தருவது கடமைஎன்றான்!
செந்தமிழ்க் கவிச்சுனை! சீர்மிகு பாரதி
சிறுமையைப் பொசுக்கும் தீ!


மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home