பதவியணி
சென்றமுறை புத்தாண்டு நாளினிலே என்னைத்
திரண்டுவந்து சூழ்ந்தேதான் வாழ்த்தியவர் எல்லாம்
என்வீட்டின் எதிர்வீட்டில் இந்தமுறை கூடி
எழுச்சியுடன் அவரைத்தான் வாழ்த்துகின்றார்! என்னை
நினைவினிலே நிறுத்திவைத்தே ஏதேதோ பேசும்
நிலைதன்னை உணருகின்றேன்!ஒருசிலரோ பார்த்து
மனதார வணங்குகின்றார்! மற்றவர்கள் பாதை
மாறிவிட்டார்! வழிமுறையை விலக்கித்தான் சென்றார்!
அணிசெய்யும் பதவிதன்னை அளவுகோலாய் வைத்தே
அவனியிலே மனிதரையோ எடைபோட வேண்டாம்!
பண்புகளின் தரத்திற்குப் பரிசாக அன்பைப்
பகிர்ந்தளிக்கப் பழகுங்கள்! தன்னலமோ வேண்டாம்!
வணிகமாக அன்புதன்னைப் பண்டமாற்றம் செய்யும்
வக்கிரத்தை இனங்கண்டு புறங்காண வேண்டும்!
மனிதர்கள் தறிகெட்டு நிலைகெட்டு வாழும்
மனநிலையைத் துச்சமாகக் கருதத்தான் வேண்டும்!
மதுரை பாபாராஜ்
1989
0 Comments:
Post a Comment
<< Home