Saturday, December 06, 2008

இழுபறி நிலை வாழ்க்கை

எத்தனை நாள்தான் இந்த
இழுபறி நிலையில் வாழ்க்கை
நத்தையைப் போல ஊரும்?
நடைதடு மாறச் செய்யும்?
கொத்தடி மைக்குக் கூட
கூவிடும் விடியல் உண்டு!
நித்தமும் வெறுமை என்றால்
நிரந்தர விடியல் உண்டோ?

விடியலைத் தேடித் தேடி
விரையுது நாட்கள் இங்கே!
அடிக்கடி கரைகள் தோன்றி
அகத்தினில் மின்னித் தேயும்!
இடிவது கற்கள் என்றால்
இழப்பது ஒன்றும் இல்லை!
இடிந்திடும் உள்ளம் என்றால்
இருப்பதில் பொருள்தா னுண்டோ?

விரிகடல் கையில் வேண்டும்!
விண்மதி பையில் வேண்டும்!
அருவிகள் மடியில் வேண்டும்!
அடர்வனம் அருகில் வேண்டும்!
வரைமுறை இல்லா ஆசை
வாழ்வினில் வேண்ட வில்லை!
அலைவதோ தேவைக் காக!
அடிப்படைத் தேவைக் காக !

மதுரை பாபாராஜ்
--1989--

0 Comments:

Post a Comment

<< Home