Friday, December 12, 2008

பொன்னிறமும் பொருளும

கன்னியின் மேனி எல்லாம்
கலைஎழில் அணிக லன்கள்
மின்னிட வந்து நின்றாள்!
மிடுக்குடன் நிமிர்ந்து பார்த்தான்!
பொன்மணி நகைகள் போதும்!
பூமகள் அழகும் போதும் !
பொன்மகள் கறுப்பே என்று
புகன்றவன் மறுத்து விட்டான்!

தாமரை வண்ணங் கொண்டு
தளிர்க்கொடி வந்து நின்றாள்!
கோமகன் நிமிர்ந்து பார்த்தான்!
குலமகள் நிறமோ பொன்தான்
தாமரை மேனி தன்னில்
தழுவிடும் நகைகள் இல்லை !
ஆமிவள் வேண்டா மென்றே
அகன்றவன் சென்று விட்டான்!

பொன்னொளி தன்னை விஞ்சும்
புதுநிறப் பெண்ணும் வேண்டும்!
பொன்னிறம் இருந்த போதும்
பொன்மணிப் பொருளும் வேண்டும்!
மனிதனே! மண்ணுக் குள்ளே
மறைந்திடும் அந்த நாளில்
பொன்னிறம் சாம்ப லாகும்!
பொன்மணி விலகி போகும்!

மதுரை பாபாராஜ்
1989

0 Comments:

Post a Comment

<< Home