Thursday, April 01, 2010

குறுந்தொகைக் காட்சிகள் 2

101. சீர் சாலாவே!(பாடியவர்:பரூஉ மோவாய்ப் பதுமன் )
பாடல்:விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
====================================================== ===
விண்ணுலகம் மண்ணுலகம் இவ்விரண்டும் எண்ணற்ற
இன்பத்தைத் தந்தாலும், தாமரைப்பூ கண்களும்
பொன்வண்ண மேனியும் கொண்டவளாம் என்னவளின்
இன்பத்திற்கு ஈடுண்டோ?சொல்.

107. எழுப்பியோய் இரை ஆகுக !(பாடலாசிரியர்:மதுரைக் கண்ணனார்)
பாடல்:குவிஇணர்த் தோன்றி ஒண்பூ அன்ன...
===================================================================
நெடுநாள் பிரிந்திருந்த என்னவன் வந்தான்!
குறுகுறு நாணம் இசைமீட்ட உள்ளம்
தழுவிய இன்பக் களைப்பிலே தூக்கம்
தழுவிட நாங்கள் மயங்கிய நேரம்
பொழுது விடிந்ததென்ற சேவலே! இங்கே
இருட்டில் நடுயாமம் வீட்டெலியைத் தாக்குகின்ற
பூனையின் குட்டிக்கே நீயும் இரையாகி
ஆனமட்டும் துன்பத்தை நீயடைய வேண்டுமென்றே
காமத்தின் வேட்கை மிகுதியிலே கூறுகின்றாள்!
பூமகளின் கோபத்தைப் பார்.

=========================================================================
112. நாருடை ஒசியல் !(ஆலத்தூர் கிழார் )
பாடல்:கௌவை அஞ்சின்;காமம் எய்க்கும்;
======================================================
ஊர்ப்பழிக்(கு) அஞ்சினாலோ காமம் மெலிந்துவிடும்!
ஊர்ப்பழியை ஏற்றாலோ நாணமே எஞ்சிநிற்கும் !
தேர்த்தலைவன் போற்றிய பெண்மை நலமிங்கே
நாரொடிந்தும் கீழே விழாமல்தான் தொங்குகின்ற
சார்புக் கிளைபோல் இருப்பதை என்னருமைத்
தோழியே! பார்த்துக்கொள் இங்கு.


119. அணங்கியோள்!(சத்திநாதனார்)
பாடல்:சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை...
======================================================
பாம்பின் வரிகொண்ட குட்டி அரவமும்
யானையைத் துன்புறுத்தும்! அந்தோ!வலைக்கரத்தாள்
மான்விழியால் என்னைத்தான் காமக் கணைகளால்
ஊன்றிவிட்டாள் துன்பத்தைத் தந்து.

120. அரியள் அவள்!(பரணர்)
பாடல்:இல்லோன் இன்பம் காமுற் றாஅங்கு....
==================================================
நெஞ்சமே! ஏழை ஒருவனோ இவ்வுலக
இன்பத்தை நாடுதல்போல் நம்மவளை நாடுகின்றாய்!
இங்கே விரும்பும் பொழுதெல்லாம் நாம்நெருங்க
மங்கை அரிதானாள் பார்.
======================================================
123. வாரார் வரும் (ஐயூர் முடவன்)
பாடல்:இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
(தலைவியின் கருத்து)
===========================================================
கடற்கரைப் பூம்பொழிலில் காத்திருப்போம் என்றோம்!
சுடர்விழியை ஏங்கவைத்த என்னவரைக் காணோம்!
படகுகளில் என்தமையன் மார்களும் வந்தால்
தடைதோன்றும் அஞ்சுகின்றேன்!நான்.
======================================================
124. மனை இனியவோ?(பாலை பாடிய பெருங்கடுங்கோ)
பாடல்: உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் , அகன்தலை ....
============================================================
உப்பு வணிகர்கள் நீங்கியஊர் பாழ்பட்டு
நிற்பதுபோல் ஓமைமரக் காடும் துயரென்றே
எச்சரித்தீர்! காதலன் இல்லாத இல்லந்தான்
சற்றும் இனிதாமோ? சாற்று.

126. கார் நகும்!(ஒக்கூர் மாசாத்தி)
பாடல்:இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்...
========================================================
பொருள்வளம் பெற்றுவர நம்தலைவர் சென்றார்!
வருவார் எனக்காத்தும் தோற்றுவிட்டோம் நாம்தான்!
அரும்புகின்ற கார்காலம் முல்லைத் தொகுதி
அரும்புகளைப் பற்களாகக் கொண்டேதான் என்னை
வருத்தி அவரெங்கே என்றேதான் பார்த்துச்
சிரிக்குதடி! என்செய்வேன்?நான்.
===========================================================
130. கெடுநரும் உளரோ?(வெள்ளி வீதியார்)
பாடல்:நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;....
======================================================
வருவேன் எனச்சொல்லிச் சென்றார்! ஆனால்
வரவில்லை! தோழியே! தேடுவோம் நாம்தான்!
நிலத்திற்குள் சென்று புகமாட்டார்! நீலப்
பரப்புகொண்ட வானில் பறந்தே உயர்ந்து
மறைந்திடவும் மாட்டார்! மரக்கலம் ஏறித்
துறைபல கொண்ட தொலைநாடு நோக்கிப்
பயணிக்க மாட்டார்! முறையாக நாமும்
முயன்றேதான் நாடுதோறும் , ஊர்தோறும் அங்கே
உலவும் குடிதோறும் சென்றேதான் பார்ப்போம்!
விழிவலை தப்புவாரோ?சொல்.
==============================================
162. இது தகுமோ?(கருவூர்ப் பவுத்திரன்)
பாடல்:கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
(தலைவன் கூற்று)
===================================================
ஆவினங்கள் வீடுநோக்கிச் செல்கின்ற மாலையிலே
பூவினமாம் வெண்முல்லை வெள்ளரும்பைத் தோற்றுவித்துப்
பாவிஎன்னைப் பார்த்தே நகைக்கிறதே! இச்செயலை
ஏவல் தகுதியோ? சொல்.
=======================================================
167. மகிழ்ந்த முகம் (கூடலூர் கிழார்)
பாடல்:முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
====================================================
பிசைந்த தயிர்க்கறை ஏந்தும் விரல்கள்
கசக்கிய ஆடையை மாற்றாமல் அங்கே
புகையால் எரியும் விழியைத் துடைத்தே
நிறைவுடன் வைத்த புளிக்கு ழம்பை
சுவைஎனக் கண்ணால் கணவனோ கூற
கலைமுகத்தாள் உள்ளம் மகிழ்ச்சி என்னும்
அலைகளைத் தூவியது பார்.
=======================================================
171.மீன்வலையிலே விலங்குபட்டது!
=======================================
பாடியவர்:பூங்கணுத்திரையார்
--------------------------------------------------------------
பாடல்:காண்இனிவாழி -- தோழி -- யாணர்க் ......
============================================
மீன்வலையில் நீர்நாய் பிடிபட்டால் அவ்விலங்கின்
ஊன்வெறுத்தே தூக்கி எறிந்துவிட்டு மீன்பிடிப்பார்!
நானும் அயலார் வரைவை ஒதுக்கிவைத்தே
மான்விழிகள் பூத்திருக்க என்னவனின் நல்வரவை
ஊனுறக்கம் இன்றி எதிர்பார்த்தே காத்திருப்பேன்!
தேனகத் தோழியே!பார்.
==========================================================

174. அருள் யாருமில்லது (வெண்பூதி)
பாடல்:பெயன்மழை துறந்த புலம்புஉறு கடத்துக் ......
==================================================
கள்ளிச் செடிக்காய் வெடிக்கும் பொழுதினில்
மெல்லிய ஓசை எழுப்பிடும்--அவ்வோசை
சேர்ந்திருக்கும் ஆண்பெண் புறாக்களை நீக்கியே
சோர்ந்திட வைத்திருக்கும் சொல்.

அத்தகைய பாலை வழியில் நம்தலைவர்
அக்கறையாய்ச் சென்றார்! பொருள்தான் உயிரெனின்
அப்படியே வாழட்டும்! இங்கே அருள்பண்போ
எப்படியோ போகட்டும்! போ.

=========================================================
185.அழிபடர் நிலை (மதுரை அறுவை வணிகன் இளவேட்டனார் )
பாடல்:'நுதல்பசப்பு இவர்ந்து,திதலை வாடி, .............
=================================================================
நெற்றியில் எங்கும் பசலை படர்ந்தது!
வற்றி மெலிந்தன தோள்கள்! ஒளியினை
முற்றிலும் நீங்கின தேமல்தான்! மாற்றங்கள்
முற்றும் தலைவனால் தான்.

187. நெஞ்சம் மெலியும் (கபிலர்)
பாடல்:செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி
=================================================
தாய்மான் சுரந்திருக்கும் பாலை விரும்பிய
சேய்மான் வயிறார உண்டு மலைப்பக்கம்
சார்ந்தேதான் துள்ளி விளையாடும் காட்சிகொண்ட
சோலைவன நாடிற் குரியவனே நம்தலைவன்!
வேல்விழியாள் என்னிடத்தில் கானகத்துக் கல்லைவிட
பாழ்மனங் கொண்டவனாய் உள்ளான்!இருந்தாலும்
பொல்லாத நெஞ்சம் படைத்தவன் என்றேதான்
உள்ளம் நினைக்காமல் நெஞ்சம் அவனையே
உள்ளி வருந்துவதேன்? கூறு.
=========================================================
196. அன்பின்பால் அற்று (மிளைக்கந்தன்)
பாடல்:வேம்பின் பைங்காய்என் தோழி தரினே, ....
=================================================
முன்னொரு காலத்தில் வேம்பின் பசுங்காயைத்
தன்கையால் தந்தாள் தலைவி! அதனையோ
இன்சுவை ஏந்தும் இனியநல் வெல்லமென்றீர்!
இன்றோ பறம்புமலை தண்ணீரைத் தைத்திங்கள்
தன்னில் தருகின்றாள்! ஆனால் சுடுகின்ற
வெந்நீர் என்றே நிலைமாறி சொல்கின்றீர்!
அன்பில் முரணேன்? பகர்.
========================================================
201. அமுதம் உண்க!(பாடியவர் பெயர் இல்லை)
பாடல்:அமிழ்தம் உண்க -நம் அயல்இ லாட்டி,......)
======================================================
பிரிந்தவன் வந்திடுவான் என்றநற் செய்தி
தெளிவுறச் சொன்னாள் அயல்மனை யாட்டி
தலைவி மகிழ்ந்தே அமுதத்தை உண்டு
களிக்கட்டும் என்றாள் உவந்து.

202.நெருஞ்சிமுள்!(அள்ளூர் நன்முல்லை )
பாடல்:நோம்,என் நெஞ்சே !நோம்,என் நெஞ்சே !
================================================
விலகியே நின்றால் நெருஞ்சிச் செடியும்
அழகுதான்! நாமோ அருகிலே சென்றால்
உரசுகின்ற முட்களைக் காட்டும்! அதுபோல்
உவகையைத் தந்த தலைவரோ இன்று
பலவகை இன்னல் படர்ந்திடச் செய்து
கலக்கத்தைத் தந்ததேன்? கூறு.
=============================================================

1 Comments:

Blogger அகரம் அமுதா said...

குறுந்தொகைக் காட்சிகள் அனைத்தும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவனவான இருக்கின்றன.


++++++ நெடுநாள் பிரிந்திருந்த என்னவன் வந்தான்!
குறுகுறு நாணம் இசைமீட்ட உள்ளம்
தழுவிய இன்பக் களைப்பிலே தூக்கம்
தழுவிட நாங்கள் மயங்கிய நேரம்
பொழுது விடிந்ததென்ற சேவலே! இங்கே
இருட்டில் நடுயாமம் வீட்டெலியைத் தாக்குகின்ற
பூனையின் குட்டிக்கே நீயும் இரையாகி
ஆனமட்டும் துன்பத்தை நீயடைய வேண்டுமென்றே
காமத்தின் வேட்கை மிகுதியிலே கூறுகின்றாள்!
பூமகளின் கோபத்தைப் பார். +++++++

இப் பாவரிகள் மிக அழகாக மூலப்பாவைத் தன்னுள் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு பாவையும் படித்துச் சுவைத்தேன். வளர்க தங்கள் தமிழ்ப்பணி.

6:25 AM

 

Post a Comment

<< Home