இயற்கைக் காட்சிகள்!
========================
சிட்டுக் குருவிகள் மாமரத்தில் பாடிநிற்க
மொட்டவிழ்ந்த பூக்கள் செடிகளிலே ஆடிநிற்க
கட்டவிழ்ந்த மேகங்கள் சாரலைத் தூவிட
நற்றமிழே! மெய்மறந்தேன் நான்.
காலைமுதல் மாலைவரைச் செங்கதிரோன் வெம்மையைத்
தாள முடியாமல் மாலைப் பொழுதிலே
நீலவானம் இங்கே கருமேகம் கட்டவிழ்க்க
கோலமழை தந்தாள் வியர்த்து.
============================================================
முதுமையும் தனிமையும்
==========================
வெறுமை! தனிமை! முதுமைப் பருவம்!
உறுதுணை யின்றித் தவிக்கும் கொடுமை!
எடுத்ததற் கெல்லாம் துணைக்கரம் நாடி
வெதும்புகின்ற சூழ்நிலை தான்.
===============================================================
இல்லறமே பக்தி!
==================
இல்லறத்தின் எல்லைக்குள் பக்தி இருக்கவேண்டும்!
இல்லறம் எல்லையற்ற பக்திக்குள் சென்றுவிட்டால்
இல்லறம் நாடும் கடமைகள் தத்தளிக்கும்!
இல்லறமே பக்தி! உணர்.
===================================================================
ஆசை நெருப்பு!
===============
இதுவேண்டும் என்றும் அதுவேண்டும் என்றும்
எதைப்பார்த்த போதும் எனக்குவேண்டும் என்றே
மதிமயங்கும் மாந்தர்கள் ஆசை நெருப்பில்
புதைந்து கருகும் சருகு.
=================================================================
களையை நீக்கு!
=================
எதிர்மறைப் பண்புகளை ஊக்குவித்து நாளும்
புதர்போல் வளரவிடும் எண்ணத்தை மாற்று!
உடனடியாய் நீக்கும் களைபோல நீக்கு!
படரும், தொடரும் மகிழ்வு.
=====================================================================
0 Comments:
Post a Comment
<< Home