Tuesday, November 14, 2017

மதிப்பிழந்த கட்டை!

பேசினால் வம்போ? கணைபறந்து சீறுமோ?
ஊசிகள் நெஞ்சிலே குத்துமோ? காதுகளை
மூடிவிடு! கண்களைப் பொத்திக்கொள்! வாய்மொழி
நாடிவந்தால் உள்ளே அடக்கு.

கடமையைச் செய்து விழிகளை மூடு!
நடப்பதை கைகட்டி வேடிக்கை பார்நீ!
வடக்கென்றால் என்ன?  தெற்கென்றால் என்ன?
சிறகிழந்த பாக்குயில் நீ.

கடமையைச் செய்தே உரிமையின்றி வாழ்ந்தால்
படபடப் பில்லை! பதற்றமும் இல்லை!
உடைமை,உறவோ எதுவுமே இல்லை!
கடைசிவரை நீமட்டுந் தான்.

என்னசொன்ன போதிலும் ஏதுசொன்ன போதிலும்
உன்சொல்லைக் கேட்பதில்லை! உன்னை மதிப்பதில்லை!
உன்னிடம் ஒன்றுமில்லை! பட்டமரம் ஆகிவிட்டாய்!
என்றும் தழைக்காது வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home