Sunday, February 03, 2019

குழந்தைக்குக் குறளமுதம்

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

இன்பச்சுற்றுலா!


இதுதான் வங்கக் கடலாகும்,!
இயற்கை தந்த கொடையாகும்!

சென்னைக் கழகு இதுதானே!
சிறப்பைச் சேர்ப்பதும் இதுதானே!

மாணவ மாணவி எல்லோரும்
மணலில் ஓடிப் பாருங்கள்!

கடலின் கரையை ஒட்டித்தான்
அலையில் காலை நனைக்கலாம்.!

உள்ளே தூரம் போகாதே!
உயிருக் காபத்து அவையாலே!

காணும் இந்தக் கடலிங்கே
வற்றும் நிலைதான்  வாராதோ?

துடுக்காய் மாணவன் கேட்டான்பார்!
பொறுமை யோடு பதில்சொன்னார்.!

மழையே பெய்ய வில்லையென்றால்
கடலும் வற்றிப் போய்விடுமே!

கடலில் வாழும் உயிரினங்கள்
வாழத் தேவை தண்ணீரே!

முத்து போன்ற கடல்செல்வம்
வற்றா நிலைக்கு நீர்வேண்டும்!

கடலின் இயல்பு மாறாமல்
இருக்க மழைநீர் தேவைதான்!

வள்ளுவர் குறளில் கூறுகின்றார்!
வானின் சிறப்பில் விளக்குகின்றார்!

0 Comments:

Post a Comment

<< Home