Monday, September 30, 2019

 ஆ. முதல். நா. வரை!

ஒன்றும் அறியாத சின்னஞ் சிறுபருவம்
அம்மாவை நம்பிக் கடவுளை நாள்தோறும்
நின்றே வணங்கினேன்! தெய்வக் குழந்தையோ
என்றே எனைப்பார்த்துச் சொன்னார் உறவினர்!
நெஞ்சிலே பக்தித் தளிர்.

ஆத்திகமா? நாத்திகமா? கேள்விக் கணைகளின்
தாக்கம் அணிவகுக்க உள்ளத்தி்ல் வாதங்கள்
மாற்றிமாற்றி என்னைப்  புரட்ட நாத்திகத்தின்
கூற்றை இளம்பருவம் ஏற்றது முன்வந்து!
ஏற்று நடந்தேன் உவந்து.

படிப்பை முடித்துப் பணிக்களம் சென்றேன்!
வெடித்துக் கிளம்பிய வாதங்களை வைத்தேன்!
நதியென ஓடினேன்! எட்டுதிக்கும் சென்றேன்!
விதியை மதிவெல்லும் என்றேன்
விரைந்தே!
அதிரடிப் பேச்சிலே அம்மா அயர்ந்தார்!
எதிரணி தோற்றார் தளர்ந்து.

இல்லறம் ஏற்றேன்! இணையராய் மாறினோம்!
பல்வேறு சூழ்நிலைகள் பந்தாடிப் பார்த்ததே!
நல்லறம் பேண இரண்டு குழந்தைகள்
வெல்லமாய்த் தித்திக்க வாழ்க்கை வளர்ந்தது!
நல்லவை கெட்டவை வாழ்வில் அரங்கேற
உள்ளம் கலங்கிட கொள்கைப் பிடிதளர
எல்லோர்க்கும் நல்லவனாய் நான்.

குழந்தை களுக்கோ உடல்நலச் சிக்கல்
கலங்கிய போது கடவுளை வேண்டு
நலம்கிடைக்கும் என்றேதான் தூண்டிலைப் போட்டார்!
நலம்கிடைத்தால் போதுமென்றே கொள்கையைத் தள்ளி
வலம்வருவார் யாரெனினும் தான்.

கடமை முடித்துப் பணிநிறைவு பெற்றேன்!
உடலின் முதுமைப் பருவ அணைப்பில்
படர்ந்தது பக்குவம்! நானோ உணர்ந்தேன்!
நடப்பவை எல்லாம் நடந்தாகும் வாழ்வில்!
தடுக்க, தவிர்க்க முடியாது வாழ்வில்!
கடமையே தெய்வம்! குடும்பமே கோயில்!
அகவிளக்காய் ஏந்துகிறேன் இன்று.

மதுரை பாபாராஜ்




1 Comments:

Blogger Srini Dhanaraj said...

அருமை கவிஞரே..
அழகிய கவிதை..
அனைத்தும் அனுபவ வார்த்தைகள்...

வாழ்க்கையும் ஒரு வட்டம் தான் -
அனைவரும் அதில் பயணிப்பர்
சிலருக்கோ கால்வட்டம், அரைவட்டம்
உமக்கோ முழுவட்டம்.

வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.

12:53 PM

 

Post a Comment

<< Home