Tuesday, October 29, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
--------------------------------------------------
அடக்கம் உடைமை-- 13
--------------------------------------------------------------------
அடக்கத்தின் மறுபக்கமே புகழாகும்
--------------------------------------------------------------------
அடக்கம் இருந்தால் ஒளிமயந்தான்!
அடங்காப் பண்போ இருள்மயந்தான்!

அடக்கம் என்பது செல்வந்தான்!
காப்பது நமது கடமைதான்!

இந்தப் பண்பைப் பெரியோர்கள்
உணர்ந்தே இங்குப் புகழ்வார்கள்!
இந்தப் பண்பின் முன்னாலே
மலையின் உயரம் மடுவாகும்!

பணிந்து நடத்தல் சிறப்பாகும்!
செல்வம் உள்ளோர் கடைப்பிடித்தால்
மேலும் மதிப்பார் உலகத்தார்!

ஐம்புலன் தன்னை ஒருபிறப்பில்
அடக்கி வாழ்ந்தால் எழுபிறவி
தன்னைக் காக்கும் கவசந்தான்!

கட்டுப் பாடே இல்லாமல்
நாவைப் பேச அனுமதித்தால்
துன்பந் தன்னில் சிக்கவைக்கும்!

தீமை விளையும் ஒருசொல்லால்
முன்னர் செய்த அறங்களெல்லாம்
விழலுக் கிறைத்த நீராகும்!

நெருப்புக் காயம் ஆறிவிடும்!
தீச்சொல் சுட்ட புண்மட்டும்
உள்ளந் தன்னில் வடுவாகும்!

சினத்தைக் காத்துக் கற்றறிந்தே
அடக்கம் கொண்டு வாழ்பவனை
அறங்கள் நாளும் காத்திருக்கும்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home