Monday, November 18, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
இன்னாசெய்யாமை-32 
---------------------------------------------
புண்படுத்துவோரைப் பண்படுத்து
-------------------------------------------------------------
மலைபோல் செல்வம் கிடைத்தாலும்
பிறர்க்குத் துன்பம் செய்யாத
மனமே சான்றோர்க் கழகாகும்!

சினந்தே துன்பம் தந்தாலும்
திருப்பித் துன்பம் செய்யாமல்
இருப்பதே நல்ல நெறியாகும்!

தீமை செய்யா நல்லவர்க்குத்
தீங்கைச் செய்வது நல்லதல்ல!

பழிக்குப் பழியாய் நடந்தாலோ
நல்லவ ருக்கும் துன்பந்தான்!

தீமை செய்த மாந்தருக்கு
நன்மை செய்தல் தண்டனையாம்!

ஏனைய உயிர்கள் துன்பத்தை
தனது துன்பம் எனக்கருதி
நீக்கா விட்டால் அறிவிருந்தும்
இல்லா தவராய்க் கருதிடுவார்!

தனக்குத் துன்பம் எனத்தெரிந்தால்
பிறர்க்கு அதையே செய்யாதே!

நெல்முனை அளவே என்றெண்ணி
தீமையைச் செய்யா நிலையொன்றே
பண்பை உயர்த்தும் செயலாகும்!

முற்பகல் தன்னில் மற்றவர்க்குத்
துன்பம் செய்தால் செய்தவர்க்குப்
பிற்பகல் துன்பம் வந்துவிடும்!

துன்பம் செய்தால் துன்பமெல்லாம்
செய்தவ ரையே சென்றடையும்!

தனக்குத் தீமையை விரும்பாதோர்
பிறருக்குச் செய்தல் நல்லதல்ல.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home