Monday, November 18, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
வெகுளாமை--31
----------------------------------------------------------
கோபம் கொள்தல் கொடிய பழக்கம்
--------------------------------------------------------------------
கோபம் பலிக்கும் இடந்தன்னில்
காப்போன் தானே சினம்காப்போன்!
செல்லாத இடத்தில் கோபத்தைக்
காத்தா லென்ன? சினந்தென்ன?

எளியா ரிடத்தில் சினங்கொண்டால்
அதுபோல் தீமை வேறில்லை!
சினத்தால் விளையும் தீமைதான்!
சினத்தை மறத்தல் நன்மைதான்!

முகத்தின் சிரிப்பை, சித்திரத்தை
அழிக்கும் பகையோ கோபந்தான்!
உன்னைக் காக்க சினமடக்கு!
காக்க மறுத்தால் உனையழிக்கும்!

சினமோ நெருப்பாய் மாறிவிடும்!
காக்கும் உறவை அழித்துவிடும்!
நிலத்தில் அடித்தால் கைவலிக்கும்!
சினத்தில் திளைத்தால் துன்புறுவான்!

அனலைப் போன்ற துன்பத்தை
ஒருவன் நமக்குச் செய்தாலும்
புனலாய் மாறி சினம்தவிர்த்தால்
நிம்மதி யாக வாழலாம்!

மனதால் சினத்தைப் புறக்கணித்தால்
நல்லவை எல்லாம் கைகூடும்!
சினமுடை யோர்கள் இறந்தவராம்
சினத்தைத் துறந்தோர் துறவிகளாம்

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home