Thursday, November 14, 2019

பரந்து கெடுக உலகியற்றியான்!

சமத்துவம் எங்கே?

குப்பை குவிந்திருக்கும் தொட்டிக்குள்
கைகளை
விட்டே கிளறும்  மனிதனே! மற்றவர்க்கோ
குப்பை! உனக்கங்கே மாணிக்கம் கிடைக்கிறதோ!
எப்படியோ உன்தேவை குப்பையிலே
வாழ்கிறது!
நற்றமிழே! வாழ்க்கையைப் பார்த்தாயா?
மண்ணகத்தில்
குப்பை எனஒதுக்கும்  மாந்தர்கள் கூட்டத்தில்
குப்பைக்குள் வாழ்க்கையைத் தேடும் மனிதருண்டு!
எத்தனைநாள் இந்தத் தொடர்கதை சொல்வாயா?
இப்படித்தான் வாழ்வில் சமத்துவம் என்றானால்
எப்படி  ஏற்பது சொல்?

அன்றிருந்து இன்றுவரை ஏழைகள் ஏழையாக
மன்றாடும் காட்சிகள் கண்டேதான் தொந்துபோனேன்!
தன்னலக் கூட்டம் தலைநிமிர்ந்து வாழ்கிறதே!
என்றிங்கே ஏழைக் குயர்வு?

விதியென்று சொல்லித் தப்பவேண்டாம்! நாளும்
கதியற்று வாழ்வோர் கணக்கி லடங்கார்!
புதிய விதிசெய்து  காக்கும் துணிச்சல்
விடியலைக் காட்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home