Friday, April 24, 2020


எங்கள் வீட்டில் விநாயக சதுர்த்தி!
1965 --- 1976

சோசலிசக் கடவுள் விநாயகர் என்று
அப்பா முத்துசுப்பு அவர்கள் சொல்வார்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

ஔவையார்

பாட்டி அடுக்களையில் கால்நீட்டி அமர்ந்தேதான்
ஆட்சி புரிந்தார் கொழுக்கட்டை செய்வதில்!
ஆர்வமுடன் தங்கையுடன் அம்மா பரபரப்பாய்
வேலைகள் செய்வார் விரைந்து.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகரை இந்நாளில்
கொண்டாடி வீட்டில் மகிழ்ந்திருப்போம்! தந்தைக்கு
என்னமோ இந்த விழாவிலே ஆர்வமுண்டு!
தந்தை இருந்தமட்டும் இந்த விழாவினைக்
கொண்டாடும் பாங்கே தனி.

காலையில் காசி  நரவண்டி ஏறித்தான்
தேர்முட்டி போவோம்! களிமண் சிலைவாங்கி
ஆர்வமுடன் மாலை, கதம்பப் பொடிவாங்கி
வாழைக்கன் றிரண்டோடு காதோலை, குண்டுமணி
வாங்கி அலங்கரிக்க மைடப்பா வாங்குவோம்!
ஆசையுடன் பிள்ளையா ரைத்தான் ரசித்திருப்போம்!
வீடே எதிர்பார்த்துக் காத்திருக்கும்! வந்தவுடன்
வீட்டிற்குள் வைப்போம் சுமந்து.

சிலையைத் தந்தை அலங்கரிப்பார்! நாங்கள்
அலைபாயும் ஆசையுடன் பார்த்திருப்போம்  சூழ்ந்து!
அலங்காரம் செய்து முடிக்கவும் அம்மா
தலைமை! வசந்தாவும்  அக்காவும் வந்தே
கொழுக்கட்டை மற்ற பதார்த்தங்கள் வைப்பார்!
குழந்தைகள் எல்லோரும் பக்திப் பழமாய்
வலம்வருவார்! பாவாவும் தம்பியும் வந்தே
உதவிகள் செய்வார் உவந்து.

மூன்றுநாள் பூசை முடிந்தே சிலைநகர்த்தி
நானும் நரவண்டி காசி உடன்வர
நீரிருக்கும் வைகைப் பகுதிக்குச் சென்றேதான்
ஊரார்கள் பார்க்க கரைத்திடுவோம் பிள்ளையாரை!
ஆர்வம் தணியும் கரைந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home