Friday, April 24, 2020

எங்கள் வீட்டுக் கொலு!

சகாயமாதா தெரு, ஞானஒளிவுபுரம்,மதுரை

இசைக்கச்சேரி: சித்தி சுசீலா பத்மநாபன்
மகள்கள்: ஜெயாபாப்பா- மல்லிகா -- கலா
மிருதங்கம்: மகன்: ராஜாராம்

ஏற்பாடு:
அம்மா, பாவா முத்துவீரன்.

www.maduraibabaraj.blogspot.com

மரப்படிகள் கொண்டே அடுக்கடுக்காய் வைத்தே
விரிப்பை அதன்மேல் விரித்துப் படியில்
வரிசையாய் பொம்மைகள்  தம்மை அடுக்கி
அழகாக வைப்போம் கொலு.

வண்ணவண்ண பொம்மைகள் ஏராளம் நின்றிருக்கும்!
கண்கவரும்  பொம்மை புராணக் கதைகளைக்
கண்முன்னே காட்டும்! இயற்கை வளபொம்மை
பன்னாட்டில் வாழ்ந்த தலைவர்கள் பொம்மைகள்
அவ்வயார் வள்ளுவர்  ராமலிங்கர் ஏசுநாதர்
என்றே  பேதமின்றி அத்தனை பொம்மையுண்டு!
வந்துவந்து பார்ப்பார் நிதம்.

வீட்டில் மதுரையில்  ஆண்டுதோறும் கொலுவுண்டு!
நாட்டமுடன்  சித்தி சுசீலா தலைமையில்
பாட அவர்மகள்கள் மூவர் ஜெயாபாப்பா
மல்லிகா மற்றும் கலாவதி வந்திடுவார்!
மாலை களைகட்டும் கேட்டு் ரசித்திருப்போம்!
மைந்தன் பெரியகண்ணா அங்கே மிருதங்கம்
கொண்டுவந்து வாசித்தார்! முத்துவீரன் பாவாவும்
வாசித்தார் ஆர்வமுடன் ஆசையுடன் அன்றுதான்!
அம்மாவும் அப்பாவும் அக்கா குடும்பமும்
தம்பியும் நானும் வசந்தாவும் பங்கெடுப்போம்!
அன்றாடம் பூசையுண்டு! சுண்டலும் தந்திடுவார்!
இன்று நினைத்தாலும்  உள்ளம் மகிழ்கிறதே!
அந்தநாள் மீண்டும் வரும்?

தியாகராசர் பாடல்கள் ஒவ்வொன்றாய்ப். பாடி
நகுமோமு மற்றும் தெலுங்கிசைப் பாடல்
விநாயகரின்  பாகும் தெளிதேனும் பாடல்
அலைபா யுதேகண்ணா பாடலை நால்வர்
குரலொன்றிப்  பாடுகின்ற அந்த லயங்கள்
ஒலிகளெல்லாம் இன்னும் செவிகளில் வந்தே
ஒலிக்கிறது பொய்யில்லை  மெய்.

எங்கெங்கோ வாழ்ந்தாலும் வாழ்விலே அக்காலம்
சென்ற நிகழ்வு மலரும் நினைவுகளாய்
என்னை எழுதத்தான்  தூண்டுகின்ற வாய்ப்பை
வண்டமிழ்ப் பாவாக்கி எந்தன் இணையதளம்
தன்னில் பதிவிடுவேன் சாற்று.

மதுரை பாபாராஜ்







0 Comments:

Post a Comment

<< Home