Tuesday, July 21, 2020

எது குற்றம்?

வீடெங்கே வாசலெங்கே
கூடெங்கே குடிசையெங்கே
தேடிவச்ச செல்வமெங்கே
தேக்கிவச்ச கனவெங்கே

ஊரெங்கே உறவெங்கே
பெற்றெடுத்த பிள்ளையெங்கே

ஒண்ணோட ஒண்ணாக
கண்ணொடு கண்ணாக
காலமெல்லாம் வாழ்ந்திருந்தோம்
கால்கடுக்க நடக்குறோமே

இந்தநிலை வருமுன்னு
எந்தநாளும் நெனக்கலயே
நொந்து போன  வாழ்க்கையிலே
கிழிந்துவிட்ட துணியானோம்

வந்துபோகும் விருந்துக்கு
வாய்ருசியா விருந்துபோட்டோம்
சென்றவரை வழியனுப்பி
வந்தவரை வரவேற்றோம்

அப்படித்தான் வாழ்ந்தநாங்கள்
இப்படித்தான் ஆகுமென்றே
கனவுலயும் நெனக்கலேயே
கலஞ்சுபோக நெனக்கலேயே

ஒருவேளை உணவுக்கு
வேன்வருமா என்றேங்கி
வந்தவுடன் ஓடுகின்றோம்
ஒருகவளச் சோறுக்கு

யாருக்கு என்னசெஞ்சோம்
எல்லோரை அரவணச்சோம்
எங்களுக்கு இந்தநிலை
தந்ததுதான் யாரிங்கே

மனுசாள பெறந்ததுதான்  குற்றமா
மானத்தோட வாழ்ந்ததுதான் குற்றமா
உரிமைகள் கேட்டதுதான் குற்றமா
எதுகுற்றம் என்னகுற்றம் சொல்லுங்கள்

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home