Monday, July 13, 2020

மீண்டெழுவோம்!

உலகில் வெளிச்சம் இருந்தும் இருட்டில்
உலகியல் வாழ்க்கை நகர்ந்திடும் போக்கில்
அலையும் அணுகுமுறை நாளும் எடுத்தும்
அலைகளே ஓயவில்லை ஏன்?

மருந்துகள் இல்லைதான்! நோயெதிர்ப்புச் சக்தி
பெருகும் உணவு, வழிமுறைகள் என்றே
தருகின்ற பட்டியலைப் பின்பற்றி நாளும்
ஒருவாறாய் வாழ்கின்றோம் இங்கு.

ஊரடங்கு மற்றும் தளர்வுகள் என்றேதான்
ஈரமனம் கொண்டே அரசுகள் செய்தாலும்
காரணம் இன்றிக் கொரோனா பரவுதே!
யாரைப் பொறுப்பாக்க சொல்?

மக்களும் சாலையில் நாளும் திரண்டேதான்
அக்கறை இன்றித்தான் கூடுகின்றார்!
நோய்பரவ
முக்கியக் காரணம் இங்கே இடைவெளியே
இல்லாமல் நிற்பதுதான் என்றே அரசுகள்
உள்ளபடி கூறுகின்ற திங்கு.

வீடுவீடாய் வந்தேதான் காய்ச்சலைச் சோதித்து
ஏடுகளில் நாளும் குறிக்கின்றார்! இத்தொண்டு
ஈடற்ற தொண்டாகும் முன்வந்து செய்வதை
நாடுபோற்றும் இங்கே உணர்ந்து.

கால்கடுக்க நிற்கின்ற காவல் துறையினர்
நாள்தோறும் தொண்டாற்றும் முன்கள வீரர்கள்
பார்மெச்ச காக்கும் மருத்துவர்கள் மற்றுமிங்கே
ஆர்வமுடன் நிற்கும் செவிலியரை
வாழ்த்துகிறேன்!

என்னென்ன செய்தாலும் எப்படித்தான் வாழ்ந்தாலும்
என்னைத்தான் வெல்ல முடியுமா? என்றேதான்
எங்கிருந்தோ கேட்கின்ற  கிருமி கொரோனாவே!
எண்ணிக்கொள் நாள்களை! மீண்டெழுவோம் வாழ்க்கையில்!
அந்தநாள் காண்போம் விரைந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home