Thursday, January 28, 2021

111 புணர்ச்சி பழகுதல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!

111. புணர்ச்சி பழகுதல்

(இன்பத்தை வியத்தல்)

குறள் 1101:

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.


பார்ப்பது கேட்பது உண்பது  தீண்டல் முகர்தலென

ஊறுகின்ற ஐம்புலன் இன்பம், வளையல்கள்

பாடுமிவள் ஏந்துகின் றாள்.

குறள் 1102:

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்னோய்க்குத் தானே மருந்து.


பாரிலுள்ள நோய்க்கு மருந்துண்டு! காதலெனும்

நோய்க்கோ இவளே மருந்து.

குறள் 1103:

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.


தாமரைக் கண்ணான்உலகளிக்கும் இன்பமெல்லாம்

பூமகள் தோளில் துயில்கொள்ளும் இன்பத்திற் 

கீடாமோ? தேனகமே சொல்.

குறள் 1104:

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்.


நெருங்கு குளிர்வாள்! விலகு சுடுவாள்!

இருவகைத் தீபெற்ற தெங்கு?

குறள் 1105:

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்.


விரும்பும் பொருள்கள் விரும்பிய போது தருமின்பம் போல இவள்தோ ளிரண்டும்

தருகிற தின்பம் வளர்ந்து.

குறள் 1106:

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்

கமிழ்தின் இயன்றன தோள்.


இவளை அணைத்தால் உயிரோ தளிர்க்கும்!

இவள்தோள் அமிழ்தமோ? கூறு.

குறள் 1107:

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.


பகுத்துண்ணும் இன்பம், தலைவி தழுவிப்

பகுத்திடும் இன்பத்திற் கொப்பு.

குறள் 1108:

வீழும் இருவர்க் கினிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.


காற்று புகமுடி யாமல் தழுவுதல்

ஊற்றெடுக்கும் காதலுக்குச் சான்று.

குறள் 1109:

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன்.


ஊடலும் நாடலும் கூடலும் காதலரின்

ஈடற்ற இன்பத்தின் ஊற்று.

குறள் 1110:

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.


நூலைப் படிக்கப் படிக்க அறியாமை நீங்குதல்போல் மங்கையின் காதலில் கூடினால் 

காண்போமே புத்தின்பந் தான்.





























0 Comments:

Post a Comment

<< Home