110 குறிப்பறிதல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
110 குறிப்பறிதல்
(தலைவியின் குறிப்பைத் தலைவன் அறிதல்)
குறள் 1091:
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
பூவிழியாள் நோக்கிரண்டு! காதல்நோய் ஒன்றுதரும்!
நோய்க்கு மருந்தளிக்கும் ஒன்று.
குறள் 1092:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
கடைக்கண் பார்வையோ பாதியல்ல, காதல்
சிறையின் பெரும்பாதி யாம்.
குறள் 1093:
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
நோக்கினாள்! பார்த்தேன் தலைகுனிந்தாள்! அன்பென்னும்
பாத்தியில் ஊற்றியநீர் சாற்று.
குறள் 1094:
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்.
நான்பார்க்கும் போது நிலத்தை அளக்கின்றாள்!
பார்க்காத போதென்னைப் பார்த்தே மனதிற்குள்
கோர்க்கின்றாள் முத்துநகை யை.
குறள் 1095:
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
என்னையோ பார்க்காமல் கண்ணைச் சுருக்கிவைத்தே
என்னைத்தான் பார்ப்பாள் மகிழ்ந்து.
குறள் 1096:
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
என்னைச் சினந்தே அயலார்போல் பேசுகின்றாள்!
அன்பை உணர்த்தும் குறிப்பு.
குறள் 1097:
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.
அனல்மொழி மற்றும் அனல்விழி எல்லாம்
மனக்காதல் தூதின் குறிப்பு.
குறள் 1098:
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
பார்ப்பேன்! குறும்பாய்ச் சிரிப்பாள்! அடடா!
நேரிழையாள் ஏந்தும் அழகு.
குறள் 1099:
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
முன்பின் தெரியாதோர் பேசுதல்போல் காதலர்
கண்களின் தூதோ இயல்பு.
குறள் 1100:
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
பாயும்கண் காதல் மொழியை உரைத்தபின்
வாய்ச்சொல்லால் என்னபயன் செப்பு?
0 Comments:
Post a Comment
<< Home