Friday, January 01, 2021

54 பொச்சாவாமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

54 பொச்சாவாமை

குறள் 531:

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.


மகிழ்ச்சி  நிலையில் மயங்கும் மறதி

வெடிக்கும் சினத்தினும் தீது.

குறள் 532:

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.


ஏழ்மை அறிவைக் கெடுக்கும்! மறதியோ

பார்போற்றும் நற்புகழ்க்கே கேடு.

குறள் 533:

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்

தெப்பானூ லோர்க்குந் துணிவு.


எத்துறை  வல்லுநர்க்கும்   என்றும் மறதியால்

சற்றும் புகழில்லை சாற்று.

குறள் 534:

அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை

பொச்சாப் புடையார்க்கு நன்கு.


அஞ்சுவோர்க்கோ பாதுகாப்பால் எந்நப் பயனுமில்லை!

இங்கே மறதி உடையோர்க்கோ எந்தநிலை

வந்தாலும் நற்பயன் இல்.

குறள் 535:

முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை

பின்னூ றிரங்கி விடும்.


துன்பம் வருமுன் காக்கவேண்டும்! வந்தபின்

தன்பிழை  எண்ணுவான் நொந்து.

குறள் 536:

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப்ப தில்.


மறதியற்ற பண்பு தொடர்ந்திருந்தால் 

நன்மை

அதுபோல வேறில்லை சாற்று.

குறள் 537:

அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்

கருவியாற் போற்றிச் செயின்.


மறவாமை கொண்டோர்க்கோ செய்ய இயலாச்

செயலொன்று மில்லை உணர்.

குறள் 538:

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா

திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.


புகழுக் குரியவற்றைச் செய்திட வேண்டும்!

மறப்போர்க்கோ  இல்லை உயர்வு.

குறள் 539:

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.


மகிழ்ச்சியில் இங்கே மறந்திடும் நேரம்

மறதியால் கெட்டோரை எண்ணு.


குறள் 540:

உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளிய துள்ளப் பெறின்.


எண்ணியதை எண்ணியே வாழ்ந்தால் எண்ணியதை

எண்ணிய வாறடைவோம் இங்கு.


மதுரை பாபாராஜ்






























0 Comments:

Post a Comment

<< Home