Friday, January 01, 2021

52 தெரிந்து வினையாடல்


 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து!

52 தெரிந்து வினையாடல்

குறள் 511:

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.


நன்மையைத் தீமையை நன்றாய் எடைபோட்டு

நன்மையைச் செய்வ தறிவு.

குறள் 512:

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை

ஆராய்வான் செய்க வினை.


வரவைப் பெருக்கி வளத்தைப் பெருக்கி

வருகின்ற துன்பத்தை நீக்குவோரைத் தேர்ந்து

தரவேண்டும் ஆற்றும் செயல்.

குறள் 513:

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.


அன்பும்  அறிவும் தெளிவும் ஆசையின்மை

இந்நான்கும் கொண்டவரை நம்பு.

குறள் 514:

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.


நன்றாக சிந்தித்துத் தேர்ந்தெடுத்த போதிலும்

தன்செயல் ஆற்றலில் வேறுபட்டு நிற்பவர்கள்

மண்ணகத்தில் உண்டு பலர்.

குறள் 515:

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்

சிறந்தானென் றேவற்பாற் றன்று.


செயல்புரியும் ஆற்றலுள்ள மாந்தரை நம்பு!

செயல்புரியத்  தத்தளிக்கும் மற்றவரை நம்பிச்

செயலைத் தருவது தீது.

குறள் 516:

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ

டெய்த உணர்ந்து செயல்.


செய்பவனின் தன்மை செயல்தன்மை காலத்தின்

எல்லை அறிந்தளித்தல் நன்று.

குறள் 517:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்

ததனை அவன்கண் விடல்.


இச்செயலை இங்கே இவன்முடிப்பான் என்றாய்ந்தே

அச்செயலை ஒப்படைத்தல் நன்று.

குறள் 518:

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.


செயலுக் குரியவனைத்தேர்ந்தெடுத்தால்  நம்பி

செயல்செய்ய விட்டுவிடல் நன்று.

குறள் 519:

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்குந் திரு.


செயல்முடிக்கும் ஆர்வத்தைத் தப்பாய்க் கருதும்

உளத்தோன் இழப்பான் வளம்.

குறள் 520:

நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.


உழைப்போர் மகிழ்ந்தால் உலகம் மகிழும்!

உழைப்போர்க்( கு)  அரணே அரசு.
























0 Comments:

Post a Comment

<< Home