Monday, January 04, 2021

59 ஒற்றாடல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

59 ஒற்றாடல்

குறள் 581:

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.


ஒற்றரும் நீதி அறநூலும் வேந்தனின்

அக்கறை ஆட்சிக்குக் கண்.

குறள் 582:

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்.


எல்லோ ரிடத்திலும் எல்லா நிகழ்வையும்

ஒற்றரின் மூலம் அறிந்துகொள்தல் நல்லரசின்

அக்கறை என்றே உணர்.

குறள் 583:

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றங் கொளக்கிடந்த தில்.


ஒற்றரின் மூலம் நிகழ்வறியா ஆட்சியாளர்

வெற்றி பெறுதல் அரிது.

குறள் 584:

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்

கனைவரையும் ஆராய்வ தொற்று.


சுற்றம் பகைவர் பொதுமக்கள் என்றாய்ந்தே

ஒற்றுசொல்வார் ஒற்றராம் பார்.

குறள் 585:

கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.


வேடமேற்று செல்வதும் சிக்கினால் அஞ்சாமல்

நாடுகாக்கும் நெஞ்சுறுதி ஒற்று.

குறள் 586:

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்

தென்செயினுஞ் சோர்வில தொற்று.


ஒற்றாடச் சென்றவர் ஒன்றும் அறியார்போல்

ஒற்றாய்ந்தே, மாட்டினால் நாட்டின் ரகசியத்தை

எப்படியும் காத்தல் திறன்.

குறள் 587:

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பா டில்லதே ஒற்று.


சதிச்செயலைக் கேட்டறிந்தே உண்மை நிலையை

அறிந்துவந்து சொல்வதே ஒற்று.

குறள் 588:

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.


ஒற்றர் ஒருவரின் செய்தியை மற்றுமோர்

ஒற்றருடன் ஒப்பிடல் காப்பு.

குறள் 589:

ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும்.


ஒற்றர் ஒருவர் அறியாமல் மூவரை

ஒன்றாக அனுப்பியே செய்திகளை ஒப்பிட்டே

உண்மை அறிதல் தெளிவு.

குறள் 590:


சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்

புறப்படுத்தான் ஆகும் மறை.


மறைவாக ஒற்றரை வாழ்த்தவேண்டும் இங்கே!

மறைக்காமல் செய்தாலோ ஒற்றர் செயலைப்

பறைசாற்றி நின்றதைப்போ லாம்.


மதுரை பாபாராஜ்

குறள்நெறிக் குரிசில் சி ஆர் வாழ்த்து

பாபா வெண்பா அதி விரைவு வண்டி 59 வது இரயில் நிலையத்தில் வந்தடைந்து விட்டது..😊💐💐👍👏

வாழ்த்துகள் பாபா.. 

பெரியகுளம் இராமசாமி ஐயா கூறிய பின்னர்தான் உங்களது பெருமை மேலும் புலப்படுகிறது..

































0 Comments:

Post a Comment

<< Home