58 கண்ணோட்டம்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
58 கண்ணோட்டம்
(இரக்கம்)
குறள் 571:
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
இரக்கமெனும் பண்போ இருப்பதால்தான் இந்த
உலகம் நிலைத்ததென்றே சொல்.
குறள் 572:
கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
இரக்கம் இயக்குதே இவ்வுலகை! அந்த
இரக்கமற்றோர் பாரின் சுமை.
குறள் 573:
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்.
கண்ணோட்டம் இல்லாத கண்ணும் இசையோடு
ஒன்றாத பண்ணுமென்றும் வீண்.
குறள் 574:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்.
கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்திலே
உள்ளன! நன்மையென்ன கூறு.
குறள் 575:
கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்.
கண்ணோட்டம் கண்ணின் நகையாகும்! இல்லையெனில்
கண்ணல்ல வெற்றுப் புண்.
குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்.
கண்ணிருந்தும் கண்ணோட்டம. இல்லாதோர், மண்ணில்
ஒன்றியே நிற்கும் மரம்.
குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
கருணையுள்ளோர் மட்டுமே கண்ணுள்ளோர்! வாழ்வில்
கருணையற்றோர் கண்ணற்றோ ராம்.
குறள் 578:
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு.
கடமையுடன் கண்ணோட்டம் நாள்தோறும் கொண்டோர்க்( கு)
உடைமையாம் இந்த உலகு.
குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
புண்படுத்திப் பார்ப்போரைக் கண்ணோட்டம் கொண்டேதான்
பண்படுத்திப் பார்த்தல் சிறப்பு.
குறள் 580:
பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
நண்பர்கள் நஞ்சனைய தீமையைச்
செய்தாலும்
பண்பாளர் ஏற்பார் பொறுத்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home