55 செங்கோன்மை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
55 செங்கோன்மை
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
குற்றத்தை ஆய்ந்து நடுநிலையைப் பின்பற்றி
நிற்பதே தீர்ப்பென்று சாற்று.
குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
உயிரினங்கள் வாழும் மழைநோக்கி! மக்கள்
செழிப்புடன் வாழ்வதற்கு செங்கோல் அரசின்
வழிநோக்கி வாழ்ந்திருப்பார் பார்த்து.
குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
அறநூல்கள் மற்றும் அறச்செயல்க ளுக்குப்
பொறுப்புதான் செங்கோ லரசு.
குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
மக்களைக் காத்துவாழும் நல்லரசை வையகமே
சுற்றிநின்று வாழ்த்தும் உவந்து.
குறள் 545:
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
பருவமழை நல்விளைச்சல் இவ்விரண்டும் நீதி
வழுவாத ஆட்சி சிறப்பு.
குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
பகைவீழ்த்தும் வேலல்ல வெற்றி! மக்கள்
அகம்வாழ்த்தும் செங்கோல்தான் சொல்.
குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
உலகை அரசுகாக்கும்! நீதிமுறை ஆட்சி
அரசைத்தான் காக்குமென்று செப்பு.
குறள் 548:
எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
முறைதவறி ஆளும் அரசனோ தானே
நிலைமாறி வீழ்ந்திடுவான் தாழ்ந்து.
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
மக்களைக் காப்பது குற்றத்தைத் தண்டித்தல்
அக்கறை ஆட்சிப் பொறுப்பு.
குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொடியவரைத் தண்டித்தல் நெல்வயலில் உள்ள
களைபறித்துக் காப்பதுபோ லாம்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home