Tuesday, January 12, 2021

79 நட்பு

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்த

79 நட்பு

குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.


நட்பை வளர்ப்பதுபோல் நற்செயல் இங்கில்லை!

அத்தகைய காப்பில்லை வேறு.

குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.


வளர்பிறைபோல்  மேலோரின் நட்பு! தேயும்

தளர்பிறைபோல் கீழோரின் நட்பு.

குறள் 783:

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.


படிக்கப் படிக்க மகிழ்ச்சிதரும் நூல்போல்

பழகப் பழக மகிழ்ச்சிதரும் சான்றோர்

தொடர்புதான் நாளும் வளர்ந்து.

குறள் 784:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென் றிடித்தற் பொருட்டு.


சிரித்து மகிழ்வது நட்பல்ல! தப்பை

இடித்துரைத்துக் காப்பதே நட்பு.

குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.


முன்பே தெரிந்திருக்க வேண்டாம்!உணர்வுகளால்

ஒன்றிய தன்மையே நட்பு.

குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு.


முகச்சிரிப்பின் வேடமல்ல நட்பு!அன்பால்

அகம்மலரும் மெய்க்கோலம்  நட்பு.

குறள் 787:

அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.


தீங்கைத்  தடுத்தேதான் நல்வழி காட்டியும்

வாட்டுகின்ற துன்பத்தில் உற்றதுணை யாகியும்

காக்கின்ற பண்புதான் நட்பு.

குறள் 788:

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.


உடைநழுவும் போது கரம்காப்ப தைப்போல்

படும்துன்பம் காப்பதே நட்பு.

குறள் 789:

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.


மாறுபாடு கொள்ளாமல் நண்பனுக்குப் பக்கபல

மாகிவாழ்தல் நட்பின் சிறப்பு.

குறள் 790:


இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.


நண்பர்கள் மாறிமாறி பண்பைப் புகழ்ந்துரைத்தால்

நட்பின் பெருமைக் கிழுக்கு.


மதுரை பாபாராஜ்
























0 Comments:

Post a Comment

<< Home